Bread of Life Church India

எல்லாம் பொதுவில்



பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம்ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர்  உடனடியாக தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து அவன் பசியை ஆற்றினார். இரவு வெகு நேரம் சென்று விட்டபடியினால், அந்த மனிதன்ஐயா நீங்கள் அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்என்று அனுமதி கேட்டான்.
போதகரும் திருச்சபையில் படுத்துக்கொள்ளும்படி அவனுக்கு அனுமதி கொடுத்து, போர்த்திக்கொள்ள போர்வையும் கொடுத்தார். இரவு அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் காலையில் அந்த மனிதன் புறப்பட்டு விட்டான்.
போதகருக்கு ஒரே சந்தோஷம். பசியாக வந்த ஒரு மனிதனுக்கு உணவு கொடுத்து, குளிருக்கு போர்வையும் கொடுத்து, தங்க இடமும் கொடுத்ததை எண்ணி அவருடைய மனமெல்லாம் பூரிப்பாக இருந்தது.
பகல் முழுவதும் அதே நினைவுடன் மகிழ்ச்சியுடன் இருந்த போதகர் மாலையில் செய்திதாளை வாசித்தார். அவர் செய்தித்தாளை வாசித்துக்கொண்டு வருகையில் நேற்று இரவு திருச்சபையில் தங்கி இருந்த மனிதனின் புகைப்படம் செய்தி தாளில் வந்திருப்பதைக் கண்டு, அதில் தன் கண்களை பதிய விட்டார்.
அதில் இருந்த செய்தி அவரை அதிரச் செய்தது. அந்த மனிதன் எங்கோ திருடி கையும் களவுமாகப் பிடிபட்டு, விசாரிக்கப்படுகையில் ஏற்கனவே இரண்டு மூன்று கொலை செய்தவன் என்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திதாளில் வந்திருக்கும் செய்தியை வாசித்து, மிகவும் வேதனையடைந்து, “ஐயோ, ஒரு கொலைகாரன், திருடன் இவனுக்கா நான் உணவு கொடுத்து, திருச்சபையில் தங்க வைத்திருந்தேன்என்று அவருடைய மனம் எல்லாம் மிகுந்த வேதனையுடன்ஐயோ இப்படிப்பட்ட மனிதனை திருச்சபையில் தங்க வைத்து, நான் மிக பெரிய பாவம் செய்து விட்டேனே, இந்த பாவத்தை நான் எப்படி போக்க போகிறேன்என்று மிகுந்த வருத்தத்துடன் இரவெல்லாம் கண்ணீருடன் தேவ சமூகத்தில் அமர்ந்துதேவனே என் பாவத்தை மன்னியுங்கள் என்று ஜெபம் செய்து இரவு வெகு நேரம் சென்று விட்டபடியால் தன்னை அறியாமல் தூங்கி விட்டார்.
தேவன் கனவில் வந்து, “ஏன் இவ்வளவு வேதனையுடன் இருக்கிறாய்என்று கேட்டார். அப்பொழுது போதகர்திருடன், கொலைகாரன் என்று தெரியாமல் ஒரு மனிதனுக்கு நான் உதவி செய்து அவனுக்கு உணவு கொடுத்து தங்க இடம் கொடுத்து, அவன் குளிருக்கு போர்த்திக்கொள்ள போர்வையும் கொடுத்து மிகுந்த பாவம் செய்து விட்டேன்என்று மிகுந்த பயத்துடன் சொன்னார்.
போதகர் சொல்வதை எல்லாம் கவனமாக கேட்ட தேவன் சிரித்துக் கொண்டே, “நீ ஒரு நாள் உதவி செய்த அந்த மனிதனுக்கு இப்பொழுது 50 வயது ஆகிறது. அந்த மனிதனுக்கு  ஐம்பது வருடமாக  உணவு கொடுத்து, எனது பூமியில் தங்குவதற்கு இடமும் கொடுத்து இருக்கிறேன்என்று சொன்னார்.

நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்” (மத்தேயு 5:45)

0 comments:

Post a Comment