Bread of Life Church India

விண்ணொளியில் மண்ணுலகம்



மனிதனுடைய குறைகளை வெளிச்சம் போட்டு, குற்றப்படுத்துவது வேதாகமத்தின் முறைகள் அல்ல. இயேசு கிறிஸ்துவும் எந்த மனிதனையும் குற்றப்படுத்தி, குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்காக இந்த பூமிக்கு வரவில்லை.
குறை இல்லாத மனிதனை இந்த பூமி முழுவதுமாக தேடிப்பார்த்தாலும் கண்டுபிடிப்பது கூடாத காரியம். அப்படியானால் எந்த மனிதனுடைய குறைகளைக்குறித்தும் பேச கூடாதா? யார் என்ன தவறு செய்தாலும் அதைக் கண்டு கொள்ளக் கூடாதா? தவறு செய்கிறவர்கள் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருக்கலாமா? என்று எதிர் கேள்விகள் வரும்.
தவறு செய்வதையோ, தவறுகளில் நிலைத்திருப்பதையோ, வேதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வில்லை. மனித வாழ்வின் ஒழுக்கத்தையும், நன்நெறிகளையும், வேதாகமமே மிகவும் வலியுருத்திக்கூறுகிறது. மேலும் பரிசுத்தமான வாழ்வை மிகவும் தெளிவாக போதிப்பது பரிசுத்த வேதாகமமே.
இவ்விதம் வேதாகமம் போதிக்கும் போது தவறு செய்கிறவர்களை, குறை சொல்வதும், குற்றப்படுத்துவதும்தானே சரியான முறை. அதுதானே கர்த்தருக்கென்று வைராக்கியமாக தன்னைக் காண்பித்துக்கொள்ளுதல் என்று சிலர் நினைத்துக்கொண்டுள்ளனர்.
ஆனால் மேலே சொன்னது போல் வேதாகமம் தவறு செய்தவர்களை குற்றப்படுத்த வில்லை. குற்றத்தை உணர்த்துவிக்கிறது. பாவம் செய்கிறவர்களை, பாவிகள் என்று குற்றப்படுத்தி, தள்ளிவிடவில்லை. மாறாக பாவத்தை உணர்த்தி, தவறுகளை சுட்டிக்காட்டி பாவத்திலிருந்தும், குற்றங்களில் இருந்தும் வெளியில் வருவதற்கு இயேசு கிறிஸ்து உதவி செய்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
மனிதர்கள் தவறு செய்யும் பொழுது அது தவறுதான் என்று சொல்லி, அவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த இந்த உலகம் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது.  யார் எப்பொழுது தவறு செய்வார்கள் என்று கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டும் இருக்கிறது. ஒருவர் எப்பொழுது தவறு செய்வார், எவ்விதம் குற்றப்படுத்தி அவமானப்படுத்தலாம் என்று, உலகமே காத்திருக்கிறது.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் பணி குறை சொல்லி, குற்றப்படுத்துவதோ, பாவி என்று சொல்லி, படுகுழியில் தள்ளுவதோ, அல்ல.
ஒரு சமயம் ஒரு வாலிபன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, தான் மிகவும் நல்லவன் என்பதை காண்பிக்கவும், அதை இயேசு கிறிஸ்துவின் வாயினாலேயே கேட்கவும் விரும்பி அவரிடம் வந்து, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்று கேட்கிறான்.  இயேசு கிறிஸ்து அவனைப்பார்த்து, நியாயப்பிரமாண வார்த்தைகளை சொல்லி அவைகளின் படி செய்யவேண்டும் என்று சொன்ன பொழுது, “நான் சிறு வயதில் இருந்தே அவைகளை செய்து வருகிறேன்என்று அந்த வாலிபன் சொல்கிறான்.
அப்பொழுது, “இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா ” (மாற்கு 10:21) என்று சொல்லி, அவனுக்குள் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி உணர்த்துகிறார்.
தன்னை எல்லாவற்றிலும் மிகவும் சரியாக இருக்கிறாய் என்று இயேசு கிறிஸ்து நற்சான்றிதழ் தருவார் என்று வந்தவனுக்கு மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டது. ஆகையால் அவன் மிகவும் மனமடிவாக போய்விட்டான் என்று வேதம் கூறுகிறது.
இந்த வேத பகுதியில் இயேசு கிறிஸ்து அந்த வாலிபனை குற்றப்படுத்தி, மனமடிவாக்க வேண்டும் என்ற விதத்தில் அவனிடத்தில் பேச வில்லை.  ஆனால் அவனிடத்தில்அன்பு கூர்ந்து, அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் இருந்த அவனுடைய குறையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். ஆனால் அந்த வாலிபனோ, அதற்கு இடங்கொடுக்க வில்லை.
எனவே, ஒருவருடைய தவறைச் சுட்டிகாட்டவோ, உணர்த்தவோ, வேண்டுமானால் அது எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம். உண்மையில் தவறை சுட்டிக்காட்டி, உணரத்துவது,அன்பினாலா? அல்லது அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினாலா? என்பதை முதலாவது சரியாக நிதானித்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சுபாவம் உள்ளவர்கள், தங்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது மிக நெருக்கமானவர்கள் தவறு செய்து, அதில் தொடர்ந்து கொண்டிருந்தால், அவர்களிடம் நேரடியாகவே, தவறுகளை சுட்டிக்காட்டி, அதை உணர்த்தி, அந்த தவறுகளில் இருந்து வெளியில் வருவதற்கு உதவி செய்திடவும் வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்துவின் அன்பாகவும் இருக்க முடியும்.
விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக நிறுத்திய போது, இயேசு கிறிஸ்து அந்த பெண்ணை மேலும் குற்றப்படுத்தி, அவளை தண்டிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேசாமல், “இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்” (யோவான் 8:11) .
இனிப் பாவம் செய்யாதேஎன்ற வார்த்தையில் அவள் செய்த பாவத்தை இயேசு கிறிஸ்து உணர்த்துகிறார். உணர்த்துவித்தது மட்டுமல்ல, அவளுடைய பாவத்தை மன்னித்து, அவளுக்கு புதுவாழ்வைக்கொடுக்கிறார்.
நியாயப்பிரமாணத்தின்படி கையும், மெய்யுமாக பிடிக்கப்பட்ட பெண் கல் எறியுண்டு, கொல்லப்பட வேண்டும். அது போலவே, அவளைச் சுற்றிலும் ஒரு கூட்டம் அவளைக் கொல்வதற்கு கல்லைக் கையில்தயாராகவே வைத்திருந்தது. அந்த இடத்தில் முடிந்து போக இருந்த அந்த பெண்ணின் வாழ்வில் இயேசு கிறிஸ்து மன்னிப்பளித்து, அவளுக்கு புதிய வாழ்வைக் கொடுத்து விட்டார்.
இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பு, அந்த பெண் தொடர்ந்து பாவத்தில் வாழ்வதற்கு கொடுத்த சான்றிதழ் அல்ல, புதிய வாழ்வுக்கு கொடுத்த அச்சாரம். அந்த பெண்ணின் பாவத்தை மன்னித்து, அந்த பெண் பாவத்தில் இருந்து முழுவதுமாக வெளியே வருவதற்கு இயேசு கிறிஸ்து உதவி செய்தார். அந்த பெண் புதிய வாழ்வைப் பெற்றுக்கொண்டாள்.
பாவம் செய்கிறவர்களுக்கு  தான் செய்வது பாவம் என்பது தெரியும். ஆனால் பாவத்தில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதுமட்டுமே தெரியாது. பாவத்தை சுட்டிக்காட்டி, உணர்த்துவித்தால் மட்டும் போதாது, அதில் இருந்து எப்படி வெளியில் வர வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து, உதவி செய்யத் தெரிந்திருக்க வேண்டும். பாவத்தைச் சொல்லி சொல்லி, குற்றப்படுத்தி குற்றப்படுத்தி, பாவத்தில் இருந்து வெளியில் வரமுடியாதபடி செய்து விடக்கூடாது. தேவனுடைய ஊழியம் பாவத்தில் இருந்து வெளியே கொண்டு வருவது. பாவி, பாவி என்று குற்றப்படுத்தி, பாவத்தின் படுகுழிகளுக்குள்ளாக போட்டு அழுத்தி விடுவதல்ல.
ஒருவர் பாவத்திலிருந்தும், குற்றத்திலிருந்தும்,  வெளியே வருவதற்கு உதவி செய்கிறவர்களுக்கு மட்டுமே, அவர்களின் பாவங்களையும், தவறுகளையும், சுட்டிக்காட்டி, உணர்த்துவதற்கும் கூட உரிமை உண்டு. இதுதான் இயேசு கிறிஸ்து கற்பிக்கும் வழி. வேதாகமம் காட்டும் பாதை.
தன்னைத்தான் நியாயப்படுத்திக்கொள்ளவோ, தன்னை தான் உயர்த்தி காண்பித்துக்கொள்ளவோ, பிறரை  குற்றப்படுத்தி காண்பிப்பதும், பிறரின் குற்றங்களை பலர் முன்னிலையில் சொல்லி, அவமானப்படுத்துவதும், பாவி என்று ஒதுக்கித் தள்ளுவதும், , பிசாசின் குணம்தான் அதில் துளியளவும் சந்தேகமே இல்லை.
எனவே, கிறிஸ்துவுக்கு, மற்றவர்களை குறை சொல்கிறவர்களோ, குற்றப்படுத்துகிறவர்களோ, தேவை இல்லை. குறைகளை, குற்றங்களை, தேவ அன்பினால் உணர்த்துவித்து தூக்கிவிடுகிறவர்களே தேவை.
ஒருவரை கல்லெறிந்து கொல்வது மிக மிக சுலபம், அதே நபரை பாவத்திற்கு மரிக்கச் செய்து, கிறிஸ்துவுக்குள் வாழ வைப்பதே ஊழியம்.
உண்மையில் ஒருவருடைய தவறை சுட்டிக் காட்டி, உணர்த்துதலே, அந்த நபர் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பு. “மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது” (நீதி 27:5) என்று வேதம் கூறுகிறது.
வெளிப்படையான கடிந்து கொள்ளுதல்என்பது எல்லாருக்கு முன்பாகவும், குற்றப்படுத்தி பேசுவது அல்ல, உள்ளதை உள்ளபடி நேரடியாக சொல்லி, தவறுகள் இருந்தால் அதை உணர்த்துவித்து சரியான வழியில் நடத்துவதாகும்.
சிலர் தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும், பாவத்தில் நிறைந்து சமாதானமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தும், அதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பது தெரியாமல், தத்தளித்துக் கொண்டிருப்பார்கள்.
சிலர் தாங்கள் செய்வது எல்லாம் சரிதான் எந்த தவறும் செய்வதே இல்லை. என்ற மாய வலையில் சிக்கி, மாய்மால வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
சிலர் தாங்கள் செய்யும் தவறு மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்ற விதத்தில் எப்பொழுதும் மற்றவர்களைக் குறித்தே குறை பேசி, குற்றப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, இவ்விதமான அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதைக் காண்பித்து, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக வந்து ஒவ்வொரு நாளும் வேத வசனத்திற்கு முன்பாக தங்களை நிறுத்தி, சுய ஆய்வு செய்து கொள்ளும் போது ஒவ்வொரு நாளும் புதுப்பொலிவுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சந்தோஷமாக , சமாதானமாக பயணம் செய்ய முடியும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்” (2 கொரி 13:10) என்று வேதம் கூறுவதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
குற்றப்படுத்தி, குற்றவாளியாக மாற்றி இடித்து போடுவது கடினமான வேலை அல்ல, அது மிக சுலபம். ஆனால் இடிந்து விழும் நிலையில் இருப்பவர்களை கிறிஸ்து இயேசுவுக்குள் ஊன்றக் கட்டுவதே பெரிய வேலை. அந்த வேலைதான் சுவிசேஷத்தின் வேலை.
மேலும்உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை” (2 கொரி 10:8) என்று தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சரியாக பயன்படுத்தி, அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி, கிறிஸ்துவுக்குள்ளாக கட்டியெழுப்ப பயன்படுத்த வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது. தேவனிடமிருந்து சுவிசேஷ அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது அழிக்க அல்ல, உருவாக்க என்பதை அறிந்து கொண்டதால் தான் பவுல் அப்போஸ்தலர் அநேகரை உருவாக்கினார்.
இன்றும் சுவிசேஷ அதிகாரம் பெற்ற ஒவ்வொருவருடைய வேலையும் இயேசு கிறிஸ்துவுக்கு நேராக ஒருவரை திருப்பி விடுதலே ஆகும். திருப்பி விடும் நபர்கள் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக வரும்பொழுது, ஆவியானவர் மூலம்  குறைகள் உணர்த்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் தேவ பெலன் கொண்டு குறைகளை அகற்றி , நித்திய இராஜ்யத்திற்கு சுதந்திரவாளியாக மாற்றப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment