Bread of Life Church India

படைப்பா? படைப்பாளியா?



வண்ண சோலைகளும், இதமான தென்றலும், இனிமையாக சூழ்ந்திருக்கும் நதியோரம் அமைந்த அழகிய ஊர் என்னும் பட்டணம். ஊருக்கு நுழை வாயில் அருகே, அமைக்கப்பட்டிருந்தது கீற்று குடிசைகள்.
அதற்கு வெளியில் துள்ளி விளையாடும் சிறுவர்கள் நாகோர், ஆரான், ஆபிராம்  அங்கும் மிங்கும் ஓடிக்கொண்டிருக்க, “நாகோர், நாகோர்’’ என்று குடிசையின் வாயிலில் குனிந்து வெளியே வந்தபடி கூப்பிட்டான் தேராகு. விளையாட்டில் முழு கவனமாக இருந்த நாகோர் கவனிக்க வில்லை. அப்போதுஅண்ணா, அப்பா உங்களை கூப்பிடுகிறார்கள்’’ என்று ஆபிராம் சொன்னதும், “என்னையா கூப்பிட்டாங்க’’ என்று கேட்டுக்கொண்டே, வேகமாக ஓடி, மூச்சிறைக்கஅப்பா , கூப்பிட்டிங்களா?’’ என்றபடி தேராகு முன்பாக நின்றான் நாகோர்.
ஆமாம் நாகோர், நதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டும், நீயும் உனது தம்பிகளும் சென்று தண்ணீர் எடுத்து வாருங்கள். கடவுள் சிலைகள் செய்வதற்கு நான் போய் மண் எடுத்து வருகிறேன்’’ என்று சொல்லியபடி மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சென்றான்.
நாகோர், ஆரானையும், ஆபிராமையும் கூட்டிக்கொண்டு, தண்ணீர் எடுப்பதற்கு நதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் தண்ணீர் எடுத்து திரும்பி வருவதற்குள் தேராகும் அவன் மனைவியும் மண் எடுத்து வந்து சிலைகள் செய்வதற்கு மண்ணை குவித்து வைத்து தண்ணீருக்காக காத்திருந்தனர்.
தண்ணீர் கொண்டுவந்ததும் தண்ணீரை ஊற்றி மிதிக்க ஆரம்பித்தான் தேராகு, அதை மரத்தின் கீழ் நிழலில் நின்று, பார்த்துக்கொண்டிருந்தனர், நாகோர், ஆரான், ஆபிராம்.
சிறிது நேரத்திற்கெல்லாம் சிலை செய்யும் பதத்திற்கு  மண் வந்ததும் பல வடிவங்களில் சிலை செய்ய ஆரம்பித்தான் தேராகு. இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஆபிராம், நாகோரை பார்த்து, “அண்ணா, அண்ணா’’ என்று கூப்பிட, திரும்பி என்ன என்பது போல் ஆபிராமை பார்த்தான் நாகோர்.
அண்ணா, அப்பா  சிலைகள் செய்கிறார்களே, அந்த சிலை யாருடைய சிலை’’ என்று கேட்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். நின்று கொண்டிருந்த ஆரானையும், ஆபிராமையும் பார்த்து, “கீழே உட்காருங்கள்’’ என்று சொல்லி விட்டு, “அப்பா செய்கிற சிலைகள் கடவுள் சிலைகள், இதை எல்லா மக்களும் நம்மிடம் இருந்து வாங்கி சென்று வணங்குவார்கள், என்று சொல்லிக்கொண்டே ஆபிராம் முகத்தை பார்க்க ஆபிராம் சிரித்தபடி அமர்ந்திருந்தான்.
அதை பார்த்த நாகோர், “டேய் ஆபிராம் நான் கடவுள் சிலைகள் என்று சொல்லுகிறேன், நீ கேலியாக சிரித்துக்கொண்டிருக்கிறாய்? என்று கேட்டான். “அப்படி இல்லண்ணா, அப்பா காலால் மிதித்து, கையால் செய்யும் இந்த மண் பொம்மைகளா கடவுள்?, இதை எப்படி கடவுள் என்று மக்கள் வாங்கி சென்று வணங்குகிறார்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லை,  என்று சொல்லி விட்டு முன்பிலும் இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தான்.
அவன் சிரிப்பதைக்கண்டு கோபம் கொண்டு, “ஆபிராம், நீ சிறுவன் உனக்கு ஒன்றும் தெரியாது, எதையும் சரியாக அறிந்து கொள்ளாமல், இப்படி கேலி செய்து சிரிக்க கூடாது. கடவுளுக்கு இது பிடிக்காது. என்று சற்று கடுமையான முகத்துடன் கண்டித்தான்.
நாகோர் கோபமான முகத்துடன் பேசுவதைக் கண்டு, “அண்ணா, உங்களுக்கு கோபம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நான் இப்படி கேட்டு சிரிக்க வில்லை. இந்த மண் பொம்மைகள் எப்படி கடவுளாக முடியும்? கடவுள் இப்படியா இருப்பார்? என்ற என்னுடைய சந்தேகத்தையே கேட்டேன். தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று தலை கவிழ்ந்து நின்றான்.
அருகில் நின்று அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஆரான்இதற்காக ஏன் நீங்கள்  சண்டையிட்டு கொள்கிறீர்கள். வாருங்கள் போகலாம்’’ என்று சமாதானப்படுத்தி அழைத்துச்சென்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் எல்லாவற்றையும் மறந்து, விளையாட ஆரம்பித்து விட்டனர்.
ஆனாலும் ஆபிராமின் மனதில் அந்த எண்ணம் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தன. இரவு நேரத்திலும் அவனுடைய எண்ணத்தில்பொம்மை செய்து அதை கடவுள் என்று சொல்லுகிறார்களே, இந்த மண் பொம்மை எப்படி கடவுளாக இருக்க முடியும்?’’ கடவுள் இப்படியா இருப்பார்! அப்பாதானே இந்த சிலைகளையே செய்கிறார், என்று நினைக்க நினைக்க அவனுடைய மனம் வேதனை அடைந்தது.
இரவெல்லாம் தூங்காமல் அதையே நினைத்துக்கொண்டிருந்தவன் தன்னையும் மறந்து வெகு நேரம் சென்ற பின் கண் அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.
காலை கதிரவன் எழுந்து நாளை துவக்கினான். அதிகாலமே எழுந்த தேராகு முந்தின நாட்களில் செய்திருந்த சிலைகள் காய்ந்திருக்கின்றனவா என்று பார்த்து, நன்றாக காய்ந்திருந்த சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு அவைகளை எடுத்து வைத்து வர்ணம் பூச ஆரம்பித்தான்.
வெகு நேரம் சென்று உறங்கிய ஆபிராம் எழுந்திருக்காமல், உறங்கிக்கொண்டிருந்தான். நாகோரும், ஆரானும் எழுந்து வந்து தேராகுக்கு உதவி செய்யும்படி அருகில் வந்து அமர்ந்தனர்.
தனது பிள்ளைகளை மகிழ்வுடன் பார்த்த தேராகு, “என்னப்பா, ஆபிராம் எங்கே?, இன்னும் எழுந்திருக்க வில்லையா?’’ என்று கேட்டான். “இல்லப்பா, இன்னும் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறான்.’’ என்று சொல்லிக்கொண்டே ஆரான் சிலைகளை வரிசையாக அடுக்கிக்கொண்டே பதில் சொன்னான்.
அப்பா அவன் எப்போது பார்த்தாலும் எதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான், அல்லது தனியாக எதாவது யோசித்துக்கொண்டே இருக்கிறான். நேற்றுக்கூட பாருங்கள் என்னிடம், இந்த மண் பொம்மையா கடவுள்? இதில் எப்படி கடவுள் இருப்பார் என்று கேட்டான். இரவு தூங்காமல் வெகு நேரம் எதையோ சிந்தித்துக்கொண்டே இருந்தான். வர வர அவனுடைய போக்கே சரியில்லை’’ என்று பட பட வென்று பேசினான் நாகோர்.
பிள்ளைகள் பேசுவதை கேட்டுக்கொண்டே தன்னுடைய வேலையில் கவனமாக இருந்த தேராகு, “அவன் சிறு பிள்ளைதானே நாகோர், அவனிடம் கோபப்படாதே, எல்லாம் சரியாகி விடும்’’ என்று தேராகு பேசிக்கொண்டிருக்கும் போதே, உறக்கத்திலிருந்து விழித்து கண்களை கசக்கியபடி ஆபிராம் வந்தான்.
சரிப்பா நாகோர், இன்று நீயும் உன் தம்பிகளும் இந்த  சிலைகளை எடுத்துக்கொண்டு, விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டும் தாயாராகுங்கள்’’ என்று சொல்லசரி அப்பாஎன்று நாகோரும், ஆரானும், புறப்பட ஆபிராம் முகம் சுழித்தான். அதை கவனித்த தேராகு.
ஆபிராம், நீ சிறு பிள்ளை இப்படி எல்லாம் செய்யக்கூடாது. இதெல்லாம் கடவுள் சிலைகள், நீயும் உனது அண்ணன்களோடு இந்த சிலைகளை விற்க புறப்படு’’ என்று சொன்னான்.
சரி என்பது போல் ஆபிராம் தலையை அசைத்தாலும், “இது கடவுள் சிலையா? இதை விற்க வேண்டுமா? இந்த சிலைகளை செய்ததே நாம் தானே? இது கடவுளா?’’ என்று  சிந்தித்து சிரித்துக்கொண்டே செல்ல ஆரம்பித்தான்.
பெரிய கூடை முழுவதும் சிலைகளை அடுக்கி, தலையில் வைத்துக்கொண்டு நாகோர் நடக்க, தானியங்களை வாங்குவதற்கு சாக்கு பையை தோளில் போட்டபடி ஆரானும், ஆபிராமும் பின்சென்றனர்.
ஆபிராம் முகத்தில் அவனுடைய அகத்தில் இருந்த கோபம் தெரிந்தது. பல நாட்களாக அவனுக்குள் இருந்த சந்தேகத்தையே அடக்கி வைக்க முடியாமல் அவன் கேட்டான். ஆனாலும் அவனை சிறுவன் என்று சொல்லி, அவனுடைய வார்த்தைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளாததே, அவனுடைய கோபத்தின் உச்சத்திற்கு காரணமாக இருந்தது.
மூவரும் வெகு தூரம் நடந்தே சென்றதால், “அண்ணா, சிறிது நேரம் அந்த மரத்தின் நிழலில் நாம் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்பு நடந்து போகலாமா? கால் அதிகமாக வலிக்கிறது’’ என்று ஆரான் சொல்ல, முன்பாக நடந்து சென்ற நாகோர், நடந்த படியே திரும்பி பார்த்துசரி தம்பி, நாம் சிறிது நேரம் ஓய்வு எடுத்தே செல்லலாம், நானும் நினைத்தேன் நீயும் சொல்லி விட்டாய்’' என்று சொல்லியபடியே மரத்தின் நிழலுக்கு சென்று, அமர்ந்தனர்.
ஆபிராமின் முகத்தை பார்த்து, “ஆபிராம் என்ன முகமெல்லாம், ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லையா? அல்லது நாம் பேசியதைக்குறித்தே யோசித்துக்கொண்டிருக்கிறாயா?’’ என்று கேட்டபடியே அவனை தொட்டுப்பார்த்தான்.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா, நான் நன்றாகதான் இருக்கிறேன்’’ என்று சொல்லியபடி முகத்தை வேறு திசை நோக்கி வைத்துக்கொண்டான்.
அவனுடைய மனதில் இன்னும் கோபம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட நாகோர், அவனைப்பார்த்து சிரித்து, அவனுடைய தலையை வருடி விட்டான்.
அங்கு அமைதி நிலவியது, சிறிது நேரம் சென்ற பின்,  இங்கேயே நாம் உணவு அருந்தி விடலாமா?, உணவை எடுங்கள்’’ என்று நாகோர் சொல்ல, ஆரான் கொண்டு வந்த உணவை எடுத்தான். மூவரும் பகிர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
உணவு உண்ட பின் புறப்பட்டனர். கதிரவன் பகல் முழுவதும் தன்பணியை செய்ததால் ஓய்வு  எடுக்கும்படி செல்ல, மூவரும் பகல் முழுவதும் சுற்றி அலைந்து, சில சிலைகள் மட்டுமே விற்க்கப்பட்டிருக்க இன்னும் பாதிக்கு மேல் இருந்த சிலைகளை சுமந்தபடி  தங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
                தேராகு சிலைகளுக்கு வண்ணமிட்டுக் அழகுபடுத்திக்கொண்டிருந்தான், தொலைவில் வந்துகொண்டிருக்கும் மகன்களைப் பார்த்து, எதிரே சென்று, “என்னப்பா, இன்று இத்தனை சிலைகளை திருப்பி எடுத்துவந்திருக்கிறீர்கள்’’? என்று கேட்டு, நாகோரின் தலையில் இருந்து இறக்கி, தன்னுடைய தலையில் வைத்து வீட்டை நோக்கி நடந்தான்.
                நாங்கள் எல்லா ஊர்களுக்கும் சென்றோம், ஆனால் இன்று இவ்வளவுதான் விற்க முடிந்தது அப்பா’’ என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து கால்களைக் கழுவினான்.
                ஆபிராம் தான் சுமந்துவந்த தானியங்களை வீட்டிற்குள் வைத்துவிட்டு, வெளியே வந்துஅப்பா, இந்த சிலைகளையே நாம் எந்தனை காலம் செய்வது, வேறு எதாவது வித விதமான அழகிய சிலைகள் செய்தால் நன்றாக விற்குமோ’’ என்று தனது தகப்பனாரின் முகத்தைப்பார்த்தான்.
                தேராகு சிரித்தபடியே, “ஆபிராம் நீ சிறுபையன் உனக்கு ஒன்றும் தெரியாது. நாம் செய்வது கடவுள் சிலைகள். இதை செய்வது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? இதை எல்லோராலும் செய்ய முடியாது, இந்த வேலையே கடவுள் நமக்கு கொடுத்த வரம்.’’ என்று அவனுடைய தலையை வருடியபடி சொன்னான்.
                ஆபிராம் சற்று கோபமாக, “அப்பா, இந்த சிலையை எப்படி கடவுள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் கடவுளை பார்த்து இருக்கிறீர்களா? கடவுள் இப்படியா இருப்பார். கடவுளின் தோற்றம் இப்படியா இருக்கும், அது மட்டுமல்லாமல், இந்த சிலைகளைப்பார்த்து வணங்குவது கடவுளுக்கு பிடிக்குமா?’’ என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டான்.
                ஆபிராம் கேட்ட கேள்வியை பார்த்து, புன்முருவலோடுஅவனையே பார்த்து விட்டு, பதில் சொல்ல முடியாமல், “சரிப்பா, வா பிறகு பேசலாம். வெகு தூரம் நடந்து களைத்து போய் இருப்பாய், உணவு அருந்தலாம்’’ என்று சொல்லியபடி நடக்க ஆபிராமும் கூடவே சென்றான்.
                அவனுடைய மனதில்இந்த சிலைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இனிமேல் சிலை செய்ய விடக்கூடாது’’. என்று முடிவு செய்தவனாய் அமர்ந்து உணவு அருந்தினான்.
                இரவு எல்லோரும் தூங்கிய பின்னும்.  வெகு நேரம் ஆகியும் ஆபிராமுக்கு தூக்கம் வரவில்லை. எழுந்தான். அமர்ந்தான். நடந்தான். வெளியில் சென்றான். உள்ளே வந்தான். அவன் மனம் முழுவதும் கோபமாகவே இருந்தது. “இந்த சிலைகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’’ உள்மனம் பேசியது.
                வெளியே வந்தான் சிலைகள் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றான். அதைப்பார்க்க கோபம் வர இந்த சிலைகள் கடவுள் அல்ல, கடவுள் உயிர் உள்ளவர், ஆனால் இந்த சிலைகளுக்கு உயிர் இல்லை. இந்த உயிரற்ற சிலைகளை இனி செய்யவும் கூடாது, விற்கவும் கூடாது. யாரும் வணங்கவும் கூடாது’’ என்று சொல்லியபடியே எல்லாவற்றையும் உடைக்க ஆரம்பித்தான்.
                எல்லா சிலைகளையும் உடைத்து தூள் தூளாக்கி விட்டு, உள்ளே சென்று படுத்து உறங்கினான்.

தொடரும்..........


அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்  (யோசுவா 24:2)

இந்த வசனத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை வடிவம்

  

1 comments:

  1. சிறந்த கற்பனை ஆற்றல்...
    எளியவரும் புரியும் வகையில்
    சிறப்பான கதை வடிவம்...
    படிக்கத் தூண்டும் ஆர்வம்....

    தொடரட்டும் தொடர்....

    ReplyDelete