Bread of Life Church India

காலம் கெட்டு போச்சு !



 ஏலே மூதேவி விடிஞ்சி எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா எழுப்ப மூடி இருந்த போர்வையை விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.

ஏலே இப்ப எந்திரிக்கிறீயா மூஞ்சியில தண்ணிய ஊத்தவா?’’ என்று சொல்ல, “சனியென் சனியென், விடிய காலமே இதுக்கு என்ன வந்துது, நிம்மதியா உறங்கக் கூட விடாமா இப்பிடி கத்தி உசுர வாங்குது’’ என்று முணு முணுத்தபடியே அருகில் இருந்த நார்க்காலியை எட்டி உதைத்தபடியே விருட் என்று வெளியே சென்றான்  ரோஸ் அம்மாவின் மகன் பீட்டர்.

யாருலே சனியென். ஒரு வேல வெட்டிக்கு போகாம ஊர சுத்தி சுத்தி வந்துக்கிட்டு, ஊர்வம்ப விலைக்குவாங்கிக்கிட்டு அலைதே,உனக்கெதுக்குலே ரோசம் வருது’’ என்று கத்துவதை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல், தெரு முனையை தாண்டி, பஸ்டாண்ட் அருகில் இருக்கும் டீ கடையை நோக்கி நடந்தான்.
டீ கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த லாரன்ஸ், தூக்க கலக்கத்துடன் நடந்து வரும் பீட்டரை பார்த்து. “என்னல மாப்ளே, எட்டு மணிதான் ஆவுது இவ்வளவு வெள்ளனமே எந்திருச்சிட்டே, என்று கேலியாக சிரித்தபடி கேட்க   அட போடே, ராத்திரி உறங்கவே பண்னென்டு மணிக்கு மேல ஆயிடுச்சி, இப்பதான் அசந்து ஒறங்கிக்கீட்டு இருந்தேன், நைய நையனு நச்சரிச்சு, என் ஆத்தாகாரி எழுப்பிட்டா, சரிலே மாப்பிளே, ஒரு டீ சொல்லு’’.
அண்ணாச்சி, மாப்ளைக்கு ஸ்டாங்க ஒரு டீ குடுங்க, ரொம்ப கொதிச்சு போயி வந்துருக்காக, என்று சொல்லி, “ஏலே மாப்ளே நேத்து, நம்ம சண்முகத்த கண்டபடி பேசி, அடிக்க போனீயாமே, ஏன்ல உனக்கு கிருக்கு பிடிச்சிருக்கா? அவன் அவன் வேல உண்டு அவன் உண்டுனு யாரு வம்புக்கும் போகாம இருக்கான் நீ என்லே அவங்கிட்ட போயி வம்பிழுக்க என்று தோள் மேல் கைய போட்டு, அவன் முகத்தைப்பார்த்தபடி கேட்டான்.
சூடான டீயை ஊதியபடி மாப்ளே, “அத ஒங்கிட்ட வந்து காலையிலேயே ஊதிட்டானா?’’ என்று டீயை குடித்தபடி கேட்டான். இல்லே மாப்ளே அவன் அம்மாதான் இப்போ சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க, நீ ஏன்டா அவன் கிட்ட வம்புக்கு போற?’’ என்று சற்று கோபமாகவே கேட்டான்  லாரன்ஸ்.
இத அவன் ஆத்தா கிட்ட வேற போயி சொல்லிட்டானா? நேத்து நான் அவன அடிக்காம விட்டது தப்பா போச்சு, மேல எதானா பேசி இருந்தானா அவன அடிச்சி மூஞ்ய பேத்து உட்ருப்பேன். பெரிய பருப்புமாதிரி சீன் காட்டிட்டு திரியிருரான்’’ என்று முகத்தை இன்னும் இருக்கமாக வைத்து பேசினான்.
என்னமோ மாப்ளே, உன்னுடைய போக்கு வர வர சரியில்ல, ரெம்ப மோசமா போயிட்டு இருக்கு, இப்படியே போறது நல்லா இல்லை எதோ, நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் என்று எழுந்து டீ க்கு பணத்தை கொடுத்து விட்டு, நடக்க ஆரம்பித்தான். டீ கிளாசை பெஞ்சில் வைத்து விட்டு, அவனோடு கூடவே, சென்றான்  பீட்டர்.
மாப்ளே, இதுக்கு போயி நீ ஏன்டா கோவிச்சுக்கிறே, எவனும் சரிஇல்லடா? எல்லாம் திருட்டு பயல்க, எல்லாம் நடிக்கிறான்ங்க, அப்படிப்படவன்ங்கள பாக்கும் போது எனக்கு எப்படி வருது தெரியுமா?’’ என்று பல்லைக் கடித்து, முட்டியை மடக்கினான்.
நடந்து கொண்டிருந்தவன் நின்று அவனை மேலும் கீழும் பார்த்து, ஏன்டா உன்ன குறிச்சி நீ என்னதான் நினைச்சிருக்க, நீ என்ன ரொம்ப யோக்கியனோ, மற்றவங்க குத்தம் குறைகளை பாக்குறதுக்கு, அவன் எப்படி இவன் எப்படினு பாத்திட்டு திரியாம, நீ எப்படி இருக்கேன்னு பாரு, அதுதான் உனக்கு நல்லது. அத உட்டுப்புட்டு அவன் சரியில்ல, இவன் சரியில்லன்னு சொல்ல உனக்கு என்ன யோக்கித இருக்கு, என்று சொல்லியபடியே நடந்தான் லாரன்ஸ்.
இந்த மாரி மட்டும், வேற எவனாவது பேசி இருந்தான்ன இன்னேரம் நடக்கிறதே வேற,  அது என்னமோ தெரியல, நீ பேசினா மட்டும் உம்மேல எனக்கு கோபமே வரல மாப்ளே’’ என்று சிரித்தபடியேமாப்ளே, உனக்கு உலகமே தெரியல, காலம் ரெம்ப கெட்டு போச்சுடா? நீ தான் இன்னும் வெள்ளந்தியாவே இருக்க, எல்லாவனும் சுய நலவாதிங்களா ஆயிட்டானுங்க, எதையாவது பொய்யகிய்ய சொல்லி, மத்தவன ஏமாத்தி, பணத்த சம்பாதிச்சுக்கிட்டு, பெரிய பருப்பு மாரி போரானுங்க, வரானுங்க, இதெல்லாம் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்லுதியா? என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது.
அவனுங்களும் நம்மளோடதான் படிச்சானுங்க, இங்கதான் சுத்திக்கிட்டு திரிந்தானுங்க, இப்ப பாரு இவனுங்களுக்கு இந்த பணம் புகழ் பேரு இதெல்லாம் எங்க இருந்து வந்திச்சு, எல்லாம் திருட்டுத்தனம், இவனுங்களெல்லாம் இப்படியே உடக்குடாது, இவனுங்க முக மூடிய எல்லாம் கிழிக்கனும்’’ என்று சொல்லி ஆவேசமாக பேசினான்.
ம் ம் இதுதான் ஒன்னோட பிரச்சனையாஆ? முதல்ல ஒன்னோட முக மூடிய கழட்டு, நீ எப்படி இருக்கேன்னு  உன்ன ஆராய்து பாரு, கடவுளுக்கு பயந்து, பெற்றோருக்கு கீழ்ப்படிந்து உண்மையா இருக்கோம்மானு பாரு, பெறகு ஊருக்கு உபதேசம் பண்ணவும், உலகத்த திருத்தவும், மத்தவங்க முக மூடிய கிழிக்கவும் போவலாம்.
உனக்கு காலம் கெட்டு போகுதே என்ற கவலைய விட, எல்லாவனும் என்ன விட பெரியாள ஆகிறானுங்களே, என்ற கவலதான் அதிகமா தெரியுது,
நீ  உனக்குள்ள இருக்கிற, வேண்டாதத அகற்றாம, மத்தவங்கள மட்டும் பாத்துக்கிட்டு திரிந்தேனா? நீ உருப்படவே மாட்ட இப்பிடியேதான் இருப்ப.
அவனவன் உண்மையா கடவுளுக்கு பயந்து, தனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வாழ்க்கைய ஒழுங்கா வாழ்ந்தா  உலகம் உருப்புடும். நீ அத குறிச்சி கவல பட வேண்டாம். காலம் கெட்டு போகல, உன்னைய மாரி ஆளுகதான் கெடுத்துட்டு திரியுரீங்க. வீண் வம்புக்கு போகாம, ஒழுங்கா எதாவது வேலை வெட்டிய பாத்து, உருப்பிட்ர வழிய பாரு,
மாற வேண்டியது மத்தவங்க இல்ல, நான்தான் என்ற எண்ணம் எல்லாருக்குள்ளும் வந்திருச்சினா, எல்லாம் நல்லாவே நடக்கும், யாரும் யாரையும் திருத்துர வேலைய செய்ய வேண்டியது இருக்காது.
ஊர திருத்துரேன், உலகத்த திருத்த போரேன்னு சொல்லிட்டு திரியிரவனுங்க திருந்திட்டாலே ஊரும், உலகமும் திரிந்தின மாதிரிதான்’’
என்று கடிகாரத்தைப்பார்த்து, “எனக்கு வேலைக்கு நேரமாச்சி நான் வேலைக்கு போவனும், வரட்டா, மாப்ளை. மொதல்ல சர்ச்சிக்கி போயி செபம் பண்ணு.’’ என்று சொல்லியபடியே லாரன்ஸ் வேகமாக நடக்க, நாம எது பேசினாலும் கம்முனு கேட்டுக்கிட்டு இருக்கும் இந்த லாரன்ஸ் பய இன்னைக்கு எப்பிடி எல்லாம் பேசுரான்.
நம்மள ஒரு பயல்க கூட புரிஞ்சிக்க மாட்ரங்களே, சரி சரி மத்த எல்லாத்தையும் விட நான் வித்தியாசமானவனா இருக்கேன்ல அதான் யாராலும் என்னைய புரிஞ்சிக்க முடியல, காலம் வரும் இந்த பீட்ரு யாருன்னு எல்லாரும் புரிஞ்சிப்பாங்க. என்று சிந்தித்தபடியே, தன்னுடைய தவறுகளை உணராதவனாய்  வீட்டை நோக்கி நடக்கலானான்  பீட்டர்.
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்’’ (சங்கீதம் 19:12).

0 comments:

Post a Comment