Bread of Life Church India

யார் மாதிரி?



ஒரு சமயம் ஊழியத்திற்கு தயாராகஇருந்த வாலிபர்களிடத்தில் “நீங்கள் எப்படி, யார் மாதிரி ஊழியம் செய்வீர்கள்’’ அதை நீங்கள் ஒரு பேப்பரில் தனித்தனியாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது,  ஒவ்வொருவரும்  “நான் இவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன். அவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன்’’ என்று, தங்களுக்குத் தெரிந்த எல்லா பிரபலமான ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தனர்.
அதே போல இன்றும் ஊழியம் என்றதும் பவுல் அப்போஸ்தலர் மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறார்.
நல்லதுதான்.
அதையும் தாண்டி சிலர், பேதுரு, அல்லது யோவான் என்று வேதாகமத்தில் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் அப்போஸ்தலர்களின் பெயரை உச்சரிப்பது உண்டு.

ஆனால் வேதாகமத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை மிகவும் சரியாக செய்த ஊழியர்கள் அநேகர் உண்டு.
அப்படிப்பட்டவர்களை வேதாகமம் அடையாளப்படுத்துகிறது. ஆனால் நம்மில் எத்தனைபேருக்கு அவர்கள் பெயர் நினைவுக்கு வருகிறது?
அனனியா { அப் 9:10}
பர்னபா {அப் 9:26,27}
அப்பொல்லோ {அப் 18: 24, 25}
தீமோத்தேயு
தீத்து.
லூக்கா
அர்க்கிப்பு
எப்பாபிரா
எப்பாபிரா தீத்து
ஆக்கில்லா, பிரிஸ்கில்லா
அன்றோனீக்
யூனியா
அம்பிலியா
உர்பான்
ஸ்தாக்கி
அப்பெல்லே
அரிஸ்தொபூலு
திரிபேனாள்.
திரிபோசாள்.
பெபேயாள்
பெர்சியாள்
ரூப்
இவர்களெல்லாம் கொஞ்சம்தான். இன்னும் அநேகருடைய பெயர்கள் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்தில் குறிப்பிடப்படாதவர்களும், இருக்கிறவர்கள் அநேகர்.  இவர்கள் எல்லோரும் ஒரே காலகட்டத்தில் ஊழியம் செய்தவர்கள் தான்.
ஆனால் ஒருவரை மாதிரியே இன்னொருவர் ஊழியம் செய்யவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தையும், தங்கள் அழைப்பையும் அறிந்து சரியாக ஊழியம் செய்தார்கள்.
ஒருவரின் நற்குணங்களை மாதிரியாக வைத்தும், அவர்களின் ஊழிய வைராக்கியமும், தேவனோடு அவர்களுக்கு இருந்த ஐக்கியமும், அவர்கள், கிறிஸ்துவை வைராக்கியமாக பின்பற்றின மாதிரியின்படியும், நாம் பின்பற்றலாம்.
மாறாக நான் அவரை மாதிரியே ஊழியம் செய்வேன் என்பது முடியாது. தனக்கு தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியம் என்ன என்பதை அறிந்து ஊழியம் செய்ய வேண்டும்.
அவரை மாதிரியே பேசுவேன், அவரை மாதிரியே உடை உடுத்துவேன், அவர் எப்படி எல்லாம் செய்வாரோ, அதை அப்படியே செய்வேன். அவர்கள் எந்த வகையில் ஊழியதை செய்கிறார்களோ, அதே வழி முறைகளை பின்பற்றுவேன் என்பது வேதத்தின்படி சரி இல்லை,
இன்றும் அநேகர்.
நான்
DGS தினகரன் மாதிரி
சுந்தரம் ஐயா மாதிரி
சாம் சுந்தரம் ஐயா மாதிரி
மோகன் சி லாசரஸ் மாதிரி
மோகன் மாதிரி
பாதர் பெர்க்மான்ஸ் மாதிரி,
அகஸ்டீன் ஜெபகுமார் மாதிரி,
எசேக்கியா பிரான்சிஸ் மாதிரி,


அவரை மாதிரி. இவரை மாதிரி என்று பிரபலமானவர்களை மனதில் கொண்டு, மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தை தான் மாதிரியாக  செய்ய நினைக்கிறார்களே தவிர, தேவன் எனக்கு எந்த ஊழியத்தை கொடுத்திருக்கிறார், அதை நான் எப்படி செய்ய வேண்டும்  என்பதை அறிய மறுத்து விடுகிறார்கள்.
ஜொலித்த ஊழியர்கள், ஜொலித்துக்கொண்டிருக்கும் ஊழியர்கள் , {ஊழியங்கள் } எல்லோரும்,  தேவன் தனக்கு கொடுத்ததை சரியாகச் செய்தபடியால்தான் ஜொலிக்க முடிந்தது. முடிகிறது.
ஒரே கால கட்டத்தில் ஊழியம் செய்த போதும், ஒவ்வொருவரும் தங்கள் அழைப்பில் நின்று சரியாக ஊழியத்தை செய்தபடியால்தான் தேவனால் அவர்களை பயன்படுத்த முடிந்தது.
எனவே இவரை போல. அவரை போல என்பதை விட்டு விட்டு, தேவன் எனக்கு கொடுத்த ஊழியத்தை தேவனுடைய பாணியிலே செய்வேன் என்று ஊழியம் செய்தால் அதுதான் தேவ சித்தமாக இருக்கும்.
தேவனுடைய ஊழியத்தை தேவனுடைய வழியில் செய்யும் போது எந்த போட்டியோ, பொறாமையோ, இருக்காது. குறை சொல்வதற்கோ, குற்றப்படுத்துவதற்கோ வேலை இருக்காது. ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுக்கும் ஊழியமும், ஊழிய வரங்களும், வித்தியாசப்பட்டிருக்கும்.
ஊழியமும், ஊழிய வரங்களும் வித்தியாசப்ட்டிருந்தாலும். எல்லாம் பக்தி விருத்திக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் வளர்ச்சிக்காகவுமே தேவன் கொடுத்திருக்கிறார்.
இதை ஒவ்வொருவரும் சரியாக அறிந்து செயல்பட்டாலே போதும். தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேறும்.
பிரபலமாக இருக்கும் ஊழியர்கள், ஊழியங்கள் மட்டும்தான் எல்லோருடைய கண்களுக்கும் “பளிச்’’ என்று தெரிகிறது. புதிய ஏற்பாட்டில் தேவனுடைய ஊழியர்களையும், அப்போஸ்தலர்களையும் சொல்லுங்கள் என்றால் அநேகர் குறிப்பாக சிலர் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்வதுண்டு. ஆனால் வேதாகம கால கட்டத்திலேயே  நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அப்போஸ்தலர்களின் பெயர்கள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதாகமத்தில் அதிக இடங்களில் வரும் பெயர் உள்ள ஊழியர்கள் மிகுந்த கிருபை உள்ளவர்கள், அவர்களே அதிகமாக ஊழியம் செய்தவர்கள்  என்றும், எங்கோ ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழியர்கள் கிருபையில் குறைந்திருப்பார்கள், அவர்கள் அதிகமாக ஊழியம் செய்திருக்க மாட்டார்கள் என்று நினைப்பதும் அறியாமையின் விளைவுதான்.
மேலும் பிரபலமான ஊழியங்களும், ஊழியர்களும் மட்டும்தான். மிக மிக பெரியவர்கள், அவர்களை மட்டும்தான் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார், என்று இக்கால பிரபலங்களை மனதில் வைத்து எண்ணிக்கொள்வதும் அறியாமையின் விளைவுதான்.
எவ்வளவு பிரபலம், எவ்வளவு வசதி, எவ்வளவு நாடுகளில் ஊழியம் என்று ஊழியத்தையும். ஊழியர்களையும் கணக்கிடாமல், எந்த ஊழியரும், தேவனால் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா ஊழியங்களும் மதிப்பு மிக்கதுதான் என்ற எண்ணங்களே வேதாகமத்தில் முதிர்ந்தவர்களாக காண்பிக்கும்.
தேவ பிள்ளைகளுக்குள்ளும், தேவ ஊழியர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட மாறுபாடான எண்ணங்கள் நீங்கி, சரியான எண்ணங்களோடு, தேவனுடைய வழிநடத்துதலின்படி ஊழியங்களை செய்து, இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால், அதுதான் ஊழியத்தின் வளர்ச்சிக்கும், மக்களை விசுவாச வாழ்வுக்குள் நடத்துவதற்கும், அநேகர் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
எனவே ஊழியங்களின் மாதிரியை தேவனிடத்தில் கேட்டு அவர் என்ன சொல்லுகிறாறோ, எப்படி நடத்துகிறாறோ, அந்த வழியில் செய்வோம். அதுதான் சிறப்பாக இருக்கும் தேவன் மகிமைப்படுவார்.

0 comments:

Post a Comment