Bread of Life Church India

மரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா?



வேதாகமத்தின் மிக முக்கியமான மைய செய்தியே இயேசு கிறிஸ்து சிலுவைபாடுகள் பட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததுதான்.
இந்த செய்திகள்தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியும், எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படும் நற்செய்தியுமாக இருக்கிறது. மரித்து உயிர்த்தெழுதல் என்பது உலகம் உண்டானது முதற்கொண்டு, மனித வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை தவிர இதுவரை வேறு ஒருவராலும் செய்திடாத, செய்தியாக இருக்கிறது.

இதில் நாம் தியானிக்கும்படி எடுத்துக்கொண்டுள்ள பொருள் என்ன வென்றால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடு, மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும்  இடைப்பட்ட நாட்கள் நேரங்களில் என்ன நடந்தது? வேதாகம வசனத்தின் மூலமாக தியானிக்கப்போகிறோம். தியானித்து அறிந்து கொள்ளப்போகிறோம்..
                இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்’’ (யோவான் 20:17).
சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த பின்பு  சொன்ன வார்த்தைகளைத்தான் நாம் மேலே வாசித்தோம்.  அப்படியானால் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்புதான் பிதாவினிடத்திற்கு அதாவது பரலோகத்திற்கு செல்வதாக வேதாகமம் கூறுகிறது.
அப்படியானால் மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் அதாவது உயிர்த்தெழுவதற்கு முன்பு அவர் எங்கு சென்றார் என்பதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிக்கலாம்.
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?’’ (1 கொரி 15:55). இந்த வசனம் இயேசு கிறிஸ்துவினால்  மரணத்திற்கும், பாதாளத்திற்கும் விடப்பட்ட சவால், சவாலை சந்திக்க வேண்டுமானால் அந்த இடத்திற்கே சென்று அதை முறியடிப்பதுதான் வெற்றி. அந்த அடிப்படையிலேயே இயேசுவானவர், மரணத்தை சந்தித்து, பாதாளத்தில் இறங்கினார்.
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்’’ (அப் 2:27). தாவீது மூலமாக தீர்க்கதரிசனமாக கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டு வசனத்தை மேற்கோள் காண்பித்து பேதுரு தமது முதலாவது பிரசங்கத்தை செய்கிறார்.
எப்படி என்றால் தாவீது மூலமாக சொல்லப்பட்ட வசனம் தாவீதை பற்றியது அல்ல, அது இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனம். அந்த தீர்க்கதரிசனமே நிறைவேறி உள்ளது என்பதை திருஷ்டாந்தப் படுத்தி சொல்லுவதைக் கவனிக்கவேண்டும்.
பாதாளத்திற்கு சென்ற இயேசு கிறிஸ்துவை பாதாளமோ கட்டி வைக்க முடிய வில்லை. ஏன் என்றால் அவர், பரிசுத்தர், பரிசுத்தர் அவர் மட்டுமே பரிசுத்தர்.
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்?’’ (ரோமர் 10:7). அவர் பாதாளத்திற்கு இறங்கியதே பாதாளத்தின் பிடியில் அதாவது பாதாளத்தால் சிறைப்படுத்தப்பட்டவர்களை தாம் சிறையாக்கி கொண்டுவரும்படியாகவே.
 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார் (எபே 4:8:10).
இந்த வசனங்களின் மூலமாக இயேசு கிறிஸ்து பாதாளத்திற்கு இறங்கினார் என்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இயேசு கிறிஸ்து ஏன் பாதாளத்தில் இறங்க வேண்டும் என்று நமக்குள்ளாக கேள்வி எழும்பும். இந்த கேள்விக்கு பதிலாக இயேசு இந்த பூமிக்கு வந்ததின் நோக்கத்தை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை கவனித்துப்பார்த்தால் நமக்கு புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
1. பாவத்தில் இருந்து விடுதலை தருகிறார். தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்’’ (ரோமர் 8:3)
2. மரணத்தில் இருந்து விடுதலை தருகிறார். அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்’’ (2 தீமோ 1:10)
3. பாதாளத்தில் இருந்து விடுதலை தருகிறார். ‘’பாதாளமே! உன் ஜெயம் எங்கே?’’ (1 கொரி 15:55).
இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு முன்புவரை மரிக்கும் எல்லா மனிதர்களையும் பாதாளமே சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.  காரணம் ஆதாமின் மீறுதல்கள் எல்லா மனிதர்களையும் தொடர்ந்து வருவதால் எந்த மனிதனாலும் மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயிக்க முடியாதபடி, மரணமும் பாதாளமும், ஆதாம் முதற்கொண்டு மனிதனை ஆண்டு வந்தது.
தேவனுடைய கிருபையாலும், தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் பாதாளம் விட்டு வைக்காமல் அவர்களையும் சிறைப்படுத்தி வைத்திருந்தது.
ஆனால் அவர்களோ, தங்கள் வாழ்நாட்களில் விசுவாசத்தினாலே மேசியாவாகிய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாளை காண ஆசையாக இருந்தார்கள்.
உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான்’’ (யோவான் 8:56). என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
தங்களை விடுவிக்க இரட்சகர் வருவார் என்று விசுவாசத்தினாலே காத்திருந்தவர்களை விடுவிக்கும் படியாகவே இயேசு கிறிஸ்து பாதாளத்தில் இறங்கினார்.
ஆகையால் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, பாதாளத்திற்குச் சென்று, உயிர்த்தெழுந்த பொழுது   பரிசுத்தவான்களின் கல்லறை திறக்கப்பட்டது. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்’’ (மத்தேயு 27:52,53). என்று வேதம் கூறுகிறது.
       ஆகவே இந்த வசனங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பொழுது கூடவே அவருக்காக காத்திருந்த பரிசுத்தவான்களை விடுவித்து அழைத்து வந்தார் என்று பார்க்கிறோம்.
பாதாளம் எல்லா மனிதர்களையும் சிறைப்படுத்தி வைத்திருந்தாலும், பாதாளத்திலும் பிளவு உண்டாக்கப்பட்டிருந்ததாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஐசுவரியவான், லாசரு சம்பவத்தில் விளக்கி சொல்லுவதை காண முடியும்.
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்’’ (லூக்கா 16:22-24).
மரித்தவர்கள் யாவரும் பாதாளத்திற்கு சென்றாலும், பாதாளம் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்ததாக இந்த சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். எப்படி என்றால் ஐசுவரியவான், ஆபிரகாமிடத்தில் பேசுகிறான், “லாசருவின் விரல் நுனியில் தண்ணீரை தோய்த்து தன் நாவை குளிரப்பண்ணும்படி தன்னிடத்தில் வரும்படி வேண்டிக்கொள்கிறான்’’.
அந்த வேளையில் இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது ‘’ (லூக்கா 16:26) என்று ஆபிரகாம் சொல்வதைக் கவனித்துப்பார்க்க வேண்டும்.
பாதாளம் எல்லோரையும் சிறையாக்கிவைத்திருந்தாலும் பரிசுத்தவான்கள், ஒரு இடத்திலும், துன்மார்க்கர் வேறு இடத்திலும் இருந்தார்கள். அதாவது, பரிசுத்தவான்கள் தேற்றப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கும், துன்மார்க்கர்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கும் இடைவெளி இருந்தது.
ஆகையால்தான் ஐசுவரியவான், ஆபிரகாமை நோக்கி பேசுகிறான், லாசருவை தன்னிடத்திற்கு வந்து தன் நாவை குளிரப்பண்ணும்படி வேண்டுகிறான். ஆனால் ஆபிரகாமோ, துன்மார்க்கர்களுக்கும், பரிசுத்தவான்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை, அதாவது இடைவெளியை சொல்லுகிறார்.
இருப்பினும் பரிசுத்தவான்களை பாதாளத்தின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்து தன்னுடைய ஆளுகைக்குள்ளாக கொண்டுவரும்படியாகவே இயேசு கிறிஸ்து பாதாளத்தில் இறங்கினார் என்று வேதம் கூறுகிறது.
அது மாத்திரமல்ல, “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்’’ (1 பேதுரு 3:18:20).
இந்த வேதப்பகுதிக்கு பலவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், இதில் நாம் சரியாக அறிந்து கொள்ளவேண்டிய சத்தியங்கள் அடங்கி இருக்கிறது.
அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்’’ என்று எழுதப்பட்டிருப்பதால் அங்கு சுவிசேஷத்தை இயேசு கிறிஸ்து பிரசங்கித்தார் என்று சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால் இந்த வசனம் அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்ட வசனம் அல்ல, பிரசங்கித்தல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
பிரசங்கம் என்று பழைய மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் புதிய திருப்புதலில் அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. செய்தியை அறிவித்தார் என்றால் அதுவரை இயேசு கிறிஸ்துவுக்காக காத்திருந்தவர்களிடத்தில் சென்று, தாம் சிலுவையிலே வெற்றி சிறந்ததை’’ (கொலோ 2:15). அறிவித்து அவர்களை விடுவித்து, பாதாளத்தின் பிடியில் உள்ள பரிசுத்தவான்களை அழைத்து வருகிறார்.
ஆகவே பிரசங்கித்தல்’’ என்ற வார்த்தையின் முழுமையான அர்த்தம் வெற்றியை பரைசாற்றி அறிவித்தல்’’ என்று கொள்ளமுடியும்.
எனவே இந்த வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு உண்மை என்னவென்றால், இந்த பூமியில்  இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாமல், விசுவாசிக்காமல், மனந்திரும்பாமல் மரிக்கும் ஒரு மனிதனுக்கு மற்றொரு வாய்ப்பு இருப்பதாக சிலர் இந்த வசனங்களை மேற்கோள் காட்டி, வியாக்கியானிப்பது தவறு.
இந்த வசனங்களின் தன்மையானது, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை குறிப்பதாக மட்டுமே இருக்கிறது.
மேலும் நோவா நாட்களில், கீழ்ப்படியாமல் போன ஆவிகள் என்று 20ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் நோவாவின் நாட்களில் நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி’’ (2 பேதுரு 2:5)னார்.   நோவாவின் பிரசங்கத்தை அசட்டை செய்தவர்கள் தண்ணீரினால் அழிவை சந்தித்தார்கள்.
நோவாவின் பிரசங்கத்தை அசட்டை செய்து மனந்திரும்பாமல் போனவர்களுக்கு முன்பாகவும், நீதியை பிரசங்கித்தவனாகிய நோவாவின் குடும்பத்தினர் முன்பாகவும், தாம் சிலுவையில் வெற்றிபெற்றதையே இயேசு கிறிஸ்து அறிவிக்கிறார்.
அங்கு அறிவிக்கப்பட்ட வெற்றியின் செய்தி, பேழையில் காக்கப்பட்ட 8 பேருக்கும், மற்றும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்குமான செய்தி, மற்றபடி கீழ்ப்படியாமல் தண்ணீரினால் அழிந்து போனவர்களுக்கோ, வெட்கத்தை ஏற்படுத்திய செய்தியாகும்.
ஏன் என்றால் விசுவாசத்தினால்தான் நோவாவும் அவனுடைய குடும்பமும் காக்கப்பட்டதாக வேதம் கூறுகிறது.
விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்’’ (எபி 11:7).
ஆகவே கீழ்ப்படியாமல் போன ஆவிகளுக்கு மறுபடியுமாக பிரசங்கித்து, அந்த ஆவிகளை இயேசு கிறிஸ்து மீட்டுக்கொண்டார் என்று வியாக்கியானம் செய்வதும் மிக மிக தவறான வியாக்கியானமாகும்.
எனவே இந்த வசனபகுதியின் மூலமாக அறிந்து கொள்ள வேண்டிய உண்மையான சத்தியங்கள்.
இந்த நாட்களிலும், கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கிறதையும், சுவிசேஷத்தையும் அசட்டை பண்ணுகிறவர்கள், நோவாவின் நாட்களில் அழிக்கப்பட்டவர்களைப்போல  வெட்கப்பட்டு போவார்கள் என்பதையே இந்த செய்தி நமக்கு அறிவிக்கிறது.
ஆகவே இந்த வசனப்பகுதி இரண்டு விதமான செய்திகளை இன்றைக்கும் நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
1. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள், மரணத்தின் கூரை உடைத்து, பாதாளத்தை ஜெயிப்பார்கள். இயேசு கிறிஸ்து நம்மை விடுவிப்பார்.
2. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காமல், ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் சுய விருப்பத்தின்படி வாழ்கிறவர்கள். வெட்கப்பட்டு போவார்கள்.
அறிவிக்கப்படும் செய்தி ஒன்றுதான், ஆனால் கேட்கிறவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம், இயேசு கிறிஸ்து சிலுவையில் வெற்றி சிறந்ததை அறிவித்து அவருக்காக காத்திருந்த பரிசுத்த வான்களை தம்மோடு அழைத்து வந்தார், ஆனால் அதே வெற்றியின் தொனி நோவாவின் மூலமாக பிரசங்கிக்கப்பட்டதை அசட்டை பண்ணியவர்களுக்கோ, வெட்கத்தை ஏற்படுத்தியது.
எப்படி என்றால் அந்த வசனம் அதோடு முடிந்து விடாமல், “அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது’’ (1 பேதுரு 3:20,21) என்று நிறைவு பெறுகிறது.

எனவே இந்த வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் சத்தியம் அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்’’ அவர்களை பாதாளத்தின் பிடியில் இருந்து விடுவிக்க இயேசு கிறிஸ்து சென்றார் என்பதையே காண்பிக்கிறது.
ஆகவே, “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது’’ (1 பேதுரு 3:21). அப்படியானால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை காண்பித்து கொடுக்கவே இந்த வேதப்பகுதி எழுதப்பட்டிருக்கிறதே தவிர, சிலர் சொல்லுவதைப்போல இது குழப்பமான வேதப்பகுதி இல்லை.
மிக மிக தெளிவாக நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எச்சரித்து கூறும் அருமையான வேத பகுதியே இது. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி ஏற்றுக்கொண்டவர்கள், இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் மூலமாக  இரட்சிக்கப்படுவார்கள். அவரோடு கூட உயிர்தெழுதலில் பங்கு பெறுகிறார்கள் என்பதை அறிவிப்பதுதான் இந்த வேதபகுதியின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
ஆகவே இயேசு கிறிஸ்து சிலுவையில் பாவத்தை ஜெயித்தார். தமது மரணத்தினால், மரணத்தை அழித்தார், பாதாளத்தில் இறங்கி பாதாளத்தின் பிடியில் இருந்தவர்களை விடுவித்து பாதாளத்திற்கு தோல்வியை ஏற்படுத்தினார்.
இதுவே அந்த மூன்று நாட்களில் நடந்த செய்திகள்

0 comments:

Post a Comment