Bread of Life Church India

மதங்களும் கிறிஸ்தவமும்



கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும் வித்தியாசப்படுகிறது.
கடவுள் ஒருவரே என்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சொன்னாலும் பெயரிலும், வழிபாடுகளிலும் கடவுளை அறிந்து கொள்ளும் அறிவிலும் அதிகப்படியான வித்தியாசங்கள் கொண்ட அநேக பிரிவுகளும் பிரிவினைகளும் உலகம் முழுவதிலும் உண்டு.

பக்தியின் மூலம் வருவது மதம். பக்தி என்பது என்ன ? ஒரு பிடிமானம் அல்லது. பற்றுதல் என்று அர்த்தம் கொள்ளலாம். தன் மனதின் பற்றுதலால் வருவதுதான் பக்தி. பக்தியால் வருவதுதான் மதம்.
மதங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டதாக இருந்தாலும், மதங்கள் உண்மையாகவே கடவுளை தேடுகிறதா? கடவுளை அடைகிறதா? என்று பார்த்தால் மதங்கள் கடவுளைத்தேடுகின்றன. ஆனால் கடவுளை அடைய முடிய வில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மையாக இருக்கின்றன.
மதங்களால் ஏன் கடவுளை அடைய முடியவில்லை என்றால் மதம் மனிதனில் இருந்து ஆரம்பிக்கின்றன. தன்னுடைய ஆத்மீக தேடலின் முடிவில் மனிதன் கண்டு பிடித்தது மதம். மதங்களின் மூலம் மனிதர் கடவுளை அடைய முயற்சி செய்கின்றனர்.
மதங்கள் எல்லாம் கடவுளை அடைய பெரும் முயற்சிகளை எடுத்தாலும் மதங்களின் வழியில் கடவுளின் உண்மைத்தன்மையை மனிதனால்  அறிய முடியவில்லை. கடவுளின் விருப்பத்தை உணரமுடிய வில்லை.
மதங்கள் கடவுளை சென்றடைய கடினமான பல வழிகளை மேற்கொண்டாலும், அந்த வழிகளும், கடவுளிடத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதை அறிந்துகொள்ளாமலே இருப்பதுதான் மதங்களின் தோல்வி.
உலகத்தில் முதலில் தோன்றின மதம் எது என்பதைக் குறித்து உலகம் முழுவதும் மக்களுக்குள் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கின்றன. எந்த மதம் முந்தி வந்தால் என்ன? எல்லா மதமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதானே. அதில் எந்த மதம் முந்தி வந்தால் என்ன? எந்த மதம் பெரிய மதமாக இருந்தால் என்ன? எந்த மதமும் கடவுளுக்கு விருப்பமில்லாத மதமாகத்தான் இருக்கின்றன.
மதங்கள் வாழ்க்கை முறைகளைவிட, வழிபாடுகளை மட்டுமே முக்கியத்துவ படுத்துகின்றன. வழிபாடுகள் எல்லாம் மனிதர்களின்  தேவைகளை முன் வைத்தே நடத்தப்படுகின்றன. கடவுளை வழிபட்டால் கடவுள் எனக்கு இதை தருவார். அதைத் தருவார் என்று எல்லாம் சுயநலத்தை மையமாக வைத்தே நடக்கின்றன. இது குறிப்பிட்ட சில மதங்களில் மட்டும் அல்ல, எல்லா மதங்களிலும் உண்டு.
மதம் கடவுளின் உண்மையான வடிவம் இன்னதென்று அறியாமல் கடவுளுக்கு தன் விருப்பத்தின்படியாக பலவிதங்களில் வடிவங்களை கொடுக்கின்றன. கடவுள் உலகத்தை படைத்தவர், ஆனால் உலக மதங்கள் படைப்புக்களை வணங்கிக்கொண்டிருக்கின்றன. பல கடவுளை படைத்துக்கொண்டிருக்கின்றன.
வாழ்ந்து மரித்த முன்னோர்களை கடவுளாக போற்றுகின்றன. வணங்குகின்றன. பாட்டன், முப்பாட்டன்தான் கடவுள் என்று பாரம்பரியங்கள் போதிக்கின்றன.
ஆனால் கிறிஸ்தவம் மதமாக மற்றவரால் அறியப்பட்டாலும், சில கிறிஸ்தவ பிரிவுகளும் மதங்களைப் போல செயல்பட்டாலும். உண்மை கிறிஸ்தவம் மதம் அல்ல. கிறிஸ்தவத்திலும் வழிபாட்டு முறைமைகள் இருந்தாலும், வழிபாடுகளை மட்டும் முக்கியத்துவ படுத்தவில்லை. வாழ்க்கை முறைகளையே அதிகமாக முக்கியத்துவ படுத்துகின்றன.
கிறிஸ்துவுக்குள் வாழுகின்ற வாழ்க்கையை வலியுறுத்திக் கூறுகிறன.. பல கடவுள் கொள்கைகளை மறுத்து, சிலை வழிபாடுகளை தடுக்கின்றன.. வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுளை சிலைக்குள் அடக்கவோ, தங்கள் விருப்பத்தின்படியான வடிவத்தை கொடுக்கவோ முடியாது என்ற உண்மையை தெளிவு படுத்துகின்றன.
மதம் மனிதனில் இருந்து துவங்குகின்றன. ஆனால் கிறிஸ்தவமோ கடவுளிடமிருந்து துவங்குகின்றன. மனிதனின் நிலையை உணர்த்துகின்றன.. வழிபாடுரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்வு முறையிலும் ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் சொல்லிக் கொடுக்கின்றன. மதங்கள் வெறும் சடங்கு முறைகளை மட்டும் பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் கிறிஸ்தவம். மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப் படுத்திக் கொண்டிருக்கிறன.
மதங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்றன. குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்கின்றன. சாதி, இனம், மொழி என தன்னை குறுகலாக்கி கொள்கின்றன. கிறிஸ்தவமோ, சாதி, மத, இன, மொழி கடந்து உண்மையாய் கடவுளை அடைய வழிசெய்கின்றன.
இப்படிப்பட்ட கிறிஸ்தவ மக்கள் எத்தனை சதவீதம் என்பது தெரியாது. ஆனால் கிறிஸ்தவம் வலியுறுத்துவதும், எதிர்பார்ப்பதும் இதைத்தான், என அறியத்தருகின்றன.
மதங்களுக்கு பல புராணங்கள் இருக்கலாம், அதின் காலங்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் முதல் மனிதனாகிய ஆதாம் எந்த மதத்தையும் உடையவனாக இருக்கவில்லை. மனித இனம் பெருக பெருக, பல விதமான மக்கள், பலவிதமான எண்ணங்கள். மனிதனின் சுயாதீனம் இதெல்லாம் ஒரே உண்மையான கடவுளிடத்திற்கு செல்ல விடாமல் தங்கள் விருப்பத்தின்படியெல்லாம் வாழும்படியாகவும், செய்து,  கடவுளுக்கு புது வடிவங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதுதான் இப்பொழுது நம்முடைய கண்களுக்கு முன்பாக காணப்படும் பல மதங்களின் தோற்றம்.
ஆனால் கிறிஸ்தவம் வாழ்வியலும், கடவுளோடு உறவாடும் முறையுமாக இருக்கின்றன.
பாவ நிலையில் பிறந்து, பாவ நிலையில் வாழும் மனிதன், கடவுளை அடையவே முடியாது. ஆனால் மனந்திரும்புதலில், மனிதன் மறுபடியும் பிறக்க முடியும், அதைத்தான் பாவத்திற்கு மரித்து, நீதிக்கு வாழ்ந்திருத்தல் என்று கிறிஸ்தவம் போதிக்கின்றன. இதுதான் கிறிஸ்தவத்தின் மையமாக இருக்கின்றன. மனித வாழ்வின் மறுரூபத்தையே, (அ) மறுவாழ்வையே  முக்கியப்படுத்துகின்றன.
மனிதனின் பாவத்திற்கு நிரந்தர பரிகாரமாக இயேசு சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்தார், உயிர்தெழுந்த கடவுள் இயேசு மட்டுமே, பரிகாரம் செய்த இயேசு மட்டுமே, பாவங்களை மன்னிக்கவும்,  மனிதனின் பாவத்தில் இருந்து தூக்கி விடவும், தூய்மையானவனாக மாற்றவும் முடியும். என்பதை சொல்லி, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற மனிதனுக்கு, இயேசு கிறிஸ்துவினால் மன்னிப்பையும், மறு பிறப்பையும், மறுரூபத்தை கிடைக்க செய்து, ஆன்மீக வாழ்வில் (ஆவிக்குறிய வாழ்வில்) தொடர செய்து, மனிதனின் மரணத்திற்கு பின்னும், கடவுளோடு வாழும் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கின்றன..
கிறிஸ்தவம் வெளித்தோற்றத்திற்கு மட்டும் அல்ல, உள்ளான மனிதனின் மாற்றத்தையே அதிகமாக வலியுறுத்துகின்றன. தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக பல விரதங்கள், கடுமையான  பல தவங்கள் செய்து, கடுமையாக தன்னை வருத்திக்கொள்ளுவதே கடவுளை சென்றடைய வழியென்று மதங்களை பின்பற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.
மனிதனின் பாவங்களுக்கு பரிகாரமாக எத்தனையோ காரியங்களை செய்தாலும் ஒன்றும் பாவ நிவர்த்தி செய்ய வில்லை. பாவம் நிவர்த்தியாகாமல் ஒரு மனிதனும் கடவுளை சென்று அடைய முடியாது.
எல்லா மதங்களும் நல்லொழுக்கத்தை போதித்தாலும் எந்த ஒருமனிதனாலும் நல்லொழுக்கங்களை கடைப்பிடிக்க முடியவில்லை. காரணம் எல்லா மதங்களும் சொல்லும் நல்லொழுக்கங்களும் மனிதனை எந்த விதத்திலும் முழுமையாக மாற்ற முடியவில்லை.
ஆனால் கிறிஸ்தவம் பாவத்தில் இருந்து மனிதனை தூக்கி விட்டு, அவனுக்கு நல்லொழுக்கங்களை போதிக்கின்றன. பாவத்தில் இருந்து, பாவத்தில் வாழும் மனிதனுக்கு எவ்வளவு நல்ல அறநெறிகளை போதித்தாலும், நன்றாக கேட்டு, அடுத்தவனுக்கு போதிப்பான், ஆனால் தன்வாழ்வில் அவனால் செயல்படுத்த முடியாது. காரணம் அவன் பாவத்தின் அடிமைத் தனத்தில் பாவம் சொல்லுவதை மட்டும் செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறான். பாவத்தில் இருப்பவன் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான்.
பாவத்தில் இருந்து விடுதலை பெற்றவனோ, சுயாதீனனாக இருக்கிறான். இயேசு பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மனிதனை விடுவித்து, சுயாதீனமுள்ளவனாக மாற்றவே, இந்த பூமிக்கு வந்தார். பாவத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவைப்போல வாழும் பொழுதுதான் அவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
மதங்கள் பக்தியையும், நல்நெறிகளையும், போதிக்கின்றன. கிறிஸ்தவம், முதலாவது, மனிதனின் பாவ வாழ்க்கையிலிருந்து விடுவித்து, வாழ்வியல் முறைகளையும், நல்நெறிகளையும் போதிப்பது மட்டுமல்ல, அப்படியே வாழ செய்கின்றன.
இதுதான் மதங்களுக்கும், கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசமும், மாறுபாடுகளும்.

0 comments:

Post a Comment