Bread of Life Church India

சுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்




என் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல் இருக்கும் சில சுவடுகள்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச தெரியாது. அந்த கோர்வை வராது. மனதில் சிந்திப்பதை வார்த்தையில் வடிக்கும் கலை தெரியாது.
எல்லாவற்றிலும் ஜீரோ. இதுதான்  என்னைக்குறித்த எனது எண்ணம். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த ஒருநாள் மாலை வேளை, கத்தோலிக்க தேவாலயம் முன்  ஊர் மக்கள் கூடியிருக்க, 13 நாள் அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து வெளிஊரில் இருந்து வந்த பாதிரியாரை வாழ்த்தி வழியனுப்ப மாலையுடன்  காத்திருந்த வேளை, ஒருசில வார்த்தை வாழ்த்தி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

முன்பாக சிலர் பேசினார்கள்.  என் எண்ண அலைகளில் என்ன பேசலாம் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தையநாள்  அந்தோணியாரைக்குறித்த சரித்திரத்தை அழகாக விவரித்த பாதிரியாரை வாழ்த்த வேண்டும் என்று தீர்மானித்தேன். எண்ணங்களுக்குள்ளாக போராட்டம், எப்படி பேசுவது? நாவு வரண்டுவிட்டது. உடல் முழுவதும் நடுக்கம் பிடித்தது. மனம் சொல்லியது எப்படியும் பேசி விட வேண்டும்.
பேச வேண்டிய வேளை வந்தது, உடல் முழுவதும் நடுங்கியது என்பதை கால்களும், கரங்களும் தெரிவித்தன. மைக் முன்னால் நின்றேன். பேச வேண்டியவைகள் மறந்தன மக்கள் முகத்தை பார்த்ததும். மனதுக்குள் கலவரம் அதிகமானது. பேச ஆரம்பித்தேன். முன்னுக்கு பின் முரணான வார்த்தைகள். பேச்சில் கோர்வை இல்லை.  குரலில் தெளிவில்லை. 5 நிமிடம் கூட பேச்சை தொடரமுடியாமல் மன வேதனை மேலோங்க மாலை அணிவித்து, தலைகவிழ்ந்து திரும்பிவந்தேன்.
அனைவரும் என்னைப் பார்த்து கேலி செய்து, சிரிப்பது போல் இருந்தது. அவமானம் மேலோங்க இது உனக்கு தேவையா என்றது உள்மனம். உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று, தனிமையாக வந்து அமைதியாக அமர்ந்தேன். வீட்டிற்கு செல்ல அச்சம். எனது அண்ணன் சாதாரணமாகவே என்னை கேலி செய்வார், இன்று அவருக்கு சொல்லவா வேண்டும், வெகு நேர யோசனைக்கு பின் தாமதமாக வீடு சென்றேன்.
எனக்காகவே காத்திருந்தது போல் என் அண்ணன் ஆரம்பித்தார். அங்கு நான் பேசியது போல் பேசி காண்பித்து சிரித்தார். அன்றைக்கு என்னை வைத்து என் குடும்பமே சிரித்து மகிழ்ந்தது. எதுவும் பேச வில்லை. மிகவும் அமைதியாக இருந்தேன்.  
சென்னை திரும்பினோம், நாட்கள் சென்றன, அந்த நாட்களில் நான் கடையில் இருந்தேன், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கடை மட்டுமே உலகம். காலை உணவும், மதிய உணவும் எனது அண்ணன் மூலம் கடைக்கு வந்து விடும்.
தனிமையான நேரங்கள் அதிகமாக இருந்தன. எழுத ஆரம்பித்தேன். என்ன எழுதினேன் எதை எதையோ எழுதினேன். காண்பதை, நடப்பதை, உள்ளத்தில் இருப்பதை, வாலிப நாட்களில் மனதுக்குள் இருந்த போராட்டத்தை, எல்லா வற்றையும் எழுதினேன். நான் மட்டும் படித்தேன்.
காலை முதல் இரவு வரை நடக்கும் சம்பவங்களை டைரியில் எழுதினேன். எழுத்தில் உள்ள தவறை திருத்தினேன்.
கவிதை என்ற பெயரில் எதை எதையோ எழுதினேன். மன்னிக்கவும் கிறுக்கினேன்.
படிக்க வேண்டிய நாட்களில் ஒழுங்காக படிக்காமல், அப்போது படிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் அல்ல, கிடைக்கும் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.
அடுத்த வருடம் திருவிழாவிற்காக ஊருக்கு செல்லும் முன் கவிதையை போன்று (கவிதை இல்லை) அந்தோணியார் கோயில் திருவிழாவைக்  குறித்து விவரித்து எழுதி அச்சகத்தில் அச்சிட்டு எடுத்து சென்று பெருமிதமாய் எல்லோரிடமும் கொடுத்தேன்.
பேச்சால் அல்ல எழுத்தால் பேசினேன், நீயா எழுதினாய்? என்று கேட்டு சிலர் வாழ்த்தினார்கள் சந்தோஷமாக இருந்தது.
ஊருக்கு சென்று திரும்பினோம், எழுதினேன், எழுதினேன் எழுதிக்கொண்டே இருந்தேன். என் எண்ண அலைகளை வார்த்தையில் வடித்தேன். சரியா? தவறா? என்று பார்க்காமல் அந்தரங்கமாக மனதில் இருக்கும் போராட்டத்தை அப்படியே எழுதி ஏன் என் மனம் இப்படி இருக்கிறது? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். பதிலை தேடினேன் பதில் கிடைக்க வில்லை.
அந்த நாட்களில்தான் வேதாகமத்தைப் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். வேதாகமம் புரிய வில்லை, பல கேள்விகளை என் உள்ளத்தில் எழுப்பியது. வேதாகம வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையும் வேதாகமத்தை போல் இல்லையே! பிறகு ஏன் வேதாகமத்தில் இப்படி எழுதி இருக்கிறது. என்று பல கேள்விகள் பல குழப்பங்கள் எல்லா வற்றையும் எழுதினேன், எழுதி நான் மட்டும் வாசித்தேன்.
வேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை என் மனதோடு ஒப்பிட்டு பார்த்தேன், அதோடு நான் துளியும் இணைய வில்லை.  வெளித்தோற்றத்தில் ஒரு வாழ்க்கை, உள்ளத்திலோ வேறு வாழ்க்கை என்னை நானே நொந்து கொண்டேன். ஏன் இரட்டை வாழ்க்கை என்று. இதையும் எழுதினேன். நாட்கள் சென்றன, வேதம் புரிய ஆரம்பித்தது.  மனந்திரும்புதலின் அவசியத்தை உணர்ந்தேன். உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.
அந்நாட்களில்தான்  எங்கள் குடும்பத்திலும். என் வாழ்விலும் புயல் வீச ஆரம்பித்தது.   31 வயதே நிரம்பிய எனது அண்ணன் மரித்து போனார். தாங்க முடிய வில்லை.  மறக்க முடிய வில்லை. எல்லாவற்றையும் வெறுத்தேன்.
வேதாகமத்தை வெறுத்தேன், தேவனை விட்டு விலகினேன். மனம் போன போக்கில் வாழ விரும்பினேன். எழுத்தையும் மறந்தேன்.  
5 வருடங்கள் இடைவெளியில்  பணம் அதிகமாக சம்பாதித்தேன். விபத்துக்குள்ளானேன். 6 மாதங்களுக்கு மேல்  படுக்கையிலேயே இருந்தேன். மனம் திரும்பினேன். இயேசுவை ஏற்றுக்கொண்டேன். குடும்பமே கடன் என்ற கடலில் சிக்கி தவித்தது. ஞானஸ்நானம் பெற்று சபை ஐக்கியத்தில் இணைந்தேன்.
வாழ்கையில் மாற்றத்தை உணரமுடிந்தது. இயேசுவின் அன்பை ருசிக்க முடிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு தொடர ஆரம்பித்தது. வேதாகமத்தையும், கிறிஸ்தவ புத்தகங்களையும் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன்.
ஊழியத்தின் அழைப்பை உறுதி செய்து கிறிஸ்துவுக்குள்ளான ஐக்கியத்தில் பயணிக்க ஆரம்பித்தேன். பகுதி நேர வேதாகம கல்வி பயில ஆரம்பித்தேன்.
நாட்கள் உருண்டோடியது. 8 ஆண்டுகள் கழித்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் துளிர் விட்டது.
.     ஆனாலும் முன்பு போல் எழுத முடியாது, இனி எழுதும் எழுத்துக்கள் இயேசுவுக்காக, இயேசுவை பற்றியதாக இருக்க வேண்டும் எப்படி எழுதுவது? அதெல்லாம் சரி பட்டு வராது, வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
மாதாந்திர பத்திரிக்கை வெளியிட வேண்டும் என்று மனதில் எண்ணம் உதயமானது.
வேண்டாம் எழுத்துக்கும் உனக்கும் வெகுதூரம். இது தேவையில்லாத எண்ணம் என்று என்மனமே என்னோடு பேசியது. அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
மறுபடியும் மறுபடியும் அந்த எண்ணங்கள் தொடர்ந்து வர எழுதித்தான் பார்க்கலாமே என்று, எழுத ஆரம்பித்தேன், எழுத்து வரவில்லை. எழுத்தில் கோர்வை இல்லை. இருந்தாலும் விடாமல் எழுதி முதலில் கை பிரதிக்காக எழுத ஆரம்பித்தேன், எழுத்து சவாலாக இருந்தது.
கைப்பிரதி அளவில் 4 பக்கம் எழுதுவதற்கு  15 முறைக்கும் மேலாக எழுதி எழுதி திருத்தினேன். அதற்கு பின் ஒரு கிறிஸ்தவ டீச்சரிடம் கொடுத்து திருத்தினேன். பின்பு மறுபடியும் அதை பல முறை மாற்றி எழுதி, வேதாகம கல்லூரியில் எனக்கு போதித்த போதகரிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னேன். அவர்கள் திருத்தியதற்கு பின் அச்சகத்திற்கு அனுப்பினேன்.  பிழை திருத்துவதற்கு மட்டும் பல நாட்கள் ஆனது. ஒரு வழியாக முதல் கைப்பிரதி வெளி வந்தது.
தொடர்ந்து இரண்டு கைப்பிரதிகள் வெளியிடப்பட்டது.
6 மாத இடை வெளியில் மறுபடியும் மாதாந்திர பத்திரிக்கை எழுத வேண்டும், வெளியிட வேண்டும் என்று மனதில் எண்ண அலைகள் வந்து கொண்டே இருந்தது.
எழுத ஆரம்பித்தேன் எழுத்து வரவில்லை. தேவ செய்தியை எழுத்தில் வடிக்க கோர்வை வரவில்லை. எழுதி, எழுதி திருத்தினேன். பல முறை எழுதினேன்.  திருப்தி வரும்வரை திருத்தினேன்.
பத்திரிக்கை சாதாரணமானது அல்ல, என்பதை உணர்ந்து பல முறை திருத்தி வேதாகம ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு சென்று இறுதி செய்த பின் அச்சகத்திற்கு அனுப்பினேன். முதல் புத்தகம் வெளிவருவதற்கு முன் அதற்காக 4 மாதங்கள் ஆனது.
தேவ கிருபையால் 2007ல் ஜீவ அப்பம் என்ற முதல் புத்தகம் 1000 பிரதிகளாக வெற்றிகரமாக வெளி வந்தது,
அது ஊழியத்தின் ஆரம்ப நாட்கள் , சில நண்பர்களின் உதவியும் உற்சாகமும் மட்டுமே எனக்கு பலமாக இருந்தது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எனது நண்பர் கிதியோன்.
தொடர்ந்து எழுதினேன்  ஆனால் நன்றாக எழுதினேனா தெரியவில்லை, ஆனால் தவறாக எழுதவில்லை அதுமட்டும் தெரியும். நன்றாக எழுத முயற்சி செய்து கொண்டிருந்தேன் (முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்).
ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது, நாம் பார்க்காதவர்களிடமும், நம்முடைய (தேவ) வார்த்தைகள் மூலம் பேசலாம் என்று அறிந்து கொண்டேன்.
வெகு நாட்களாக ஒரு கணினி வாங்கி விடவேண்டும் என்று மனதிற்குள் இருந்த எண்ணம் 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேறியது, ஒரு பழைய கணினியை வாங்க தேவன் உதவி செய்தார்.
நான் கணினி வாங்கியதும் என் மனைவி என்னிடம் கேட்ட கேள்வி கம்யூட்டரைப்பற்றி ஒன்றுமே தெரியாது, பிறகு எதற்கு கம்யூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
அவர்கள் கேட்ட கேள்வியிலும் நியாயம் உண்டு, ஏன் என்றால் எனக்கும்  கம்யூட்டருக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. அதைக்குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றுக்கொள்ளலாம் என்று துணிந்து வாங்கினேன். சில நாட்கள் சென்றன.
ஜீவ அப்பம் மாத இதழுக்கு TDP  செய்து வந்த நண்பர் அருள் செல்வ பேரரசன் அவர்களுடன் நல்லதொரு நட்பு உண்டானது. அவர்கள் எனக்கு கணினியில் தட்டச்சு செய்வதைக்குறித்து சொல்லிக்கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி, தமிழ் தட்டச்சு செய்வதற்குறிய சாப்ட்வேர், மற்றும் தமிழ் எழுத்துருக்கள் என்று கொடுத்து எல்லாவற்றையும் நானே இயக்கும்படி சொல்லி கொடுப்பார்கள்.
எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்பேன். அவர்களின் வேலை நேரத்திலும் கூட எனது சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள். 
பேனாவால் பேப்பரில் எழுதிவந்த நான் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. (இருக்கிறது)
அந்நாட்களில்தான் 2011 ம் வருடம் முக நூல் பக்கத்தையும், வலைதளத்தையும்  உருவாக்கினேன். முகநூலில் அதிக அளவில் எழுதுவது இல்லை. ஆனால் வலைத்தளத்தில் தேவ செய்திகளை எழுதினேன். ஆரம்ப நாட்கள் என்பதால் யாரும் வந்து படிப்பது போல் தெரியவில்லை. மனம் சோர்ந்து போகும் அவ்வேளையில் எல்லாம் தேவ கிருபையே தாங்கி எழுத வைத்தது.
ஒரளவுக்கு தட்டச்சு செயவது வந்து விட்டது. 2013 ம் ஆண்டு முதல் இணையத்தையும், முக நூலையும் நற்செய்தி அறிவிக்கும் களமாக தெரிந்து எடுத்து தினம் ஒரு பதிவு அல்லது தேவ செய்தி என்ற அடிப்படையில் எழுத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
நன்றாக எழுதுகிறேன் அல்லது எழுதி விட்டேன் என்று சொல்ல வில்லை. முயற்சிக்கிறேன். என் எழுத்து ஆர்வத்தின் சுவடுகளை திரும்பி பார்த்தேன்.

தொடர்ந்து இந்த பணியை தேவ கிருபையுடன் உண்மையாய் செய்ய தேவன் துணைசெய்வாராக, அன்பர்களே ஜெபியுங்கள். எமக்காக, எமது பணிக்காக.


சுவடுகள் தொடரும்...........

0 comments:

Post a Comment