Bread of Life Church India

வாழ்க்கையின் மாற்றத்திற்கு அவசியம்



பிரியமானவர்களே, இந்தமாதத்தில் கர்த்தர் நமக்கு தரும் விசேஷமான ஆசீர்வாதமான தேவனுடைய வார்த்தை “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’ (லூக்கா 1:13). கடந்த நாட்களில் நீங்கள் எதைக்குறித்து எல்லாம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தீர்களோ, அவைகள் எல்லாவற்றிற்கும் தேவன் பதில் கொடுக்கப் போகிறார்.
மேலே நாம் வாசித்த வேதபகுதியில் சகரியாவிடம் தேவ தூதன் தரிசனமாகி கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறான், ஆனால் சகரியாவோ அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான். ஏன் என்றால் பல வருடங்களுக்கு முன்பாக தான் வேண்டுதல் செய்தவைகளை சகரியாவே மறந்து விட்டான். ஆகையால்தான் “சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்’’ என்று கேட்கிறான்.
இன்றைக்கும் அநேகர் இப்படிதான் இருக்கிறார்கள். தாங்கள் வேண்டுதல் செய்தவைகளை மறந்து விடுகிறார்கள். ஆனால் தேவன் நாம் வேண்டுதல் செய்தவைகளை மறக்கிறவர் அல்ல, அவர் கட்டாயம் பதில் கொடுக்கிறவராக இருக்கிறார். எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, தேவன் நமது வேண்டுதலுக்கு பதில் கொடுக்கிறார் என்பதைத்தான் இந்த வேத பகுதி நமக்கு விளக்கி காண்பிக்கிறது.

நாம் வேண்டுதல் செய்தவைகள் நமக்கு ஏன் மறக்கிறது, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக தொடந்து ஜெபித்துக்கொண்டிருக்கும் நாம் உடனே பதில் கிடைக்க வில்லை என்றதும் தேவன் எனக்கு பதில் கொடுக்க வில்லை என்று சோர்வடைந்து, விரக்தியாய் பேச ஆரம்பித்து விடுகிறோம். பிறகு சிறிது நாட்கள் ஆனபிறகு நாம் வேண்டுதல் செய்தவைகளைக் குறித்த நினைவுகள் கூட நமக்கு இருப்பது இல்லை. ஆனால் நாம் வேண்டுதல் செய்தவைகளை தேவன் மறக்கிறவர் அல்ல, ஏற்ற நேரத்தில் கட்டாயம் பதில் தருகிறவர்.
இதுவரை நான் வேண்டுதல் செய்தவைகளுக்கு தேவன் பதில் கொடுக்க வில்லையே என்று நீங்கள் கவலையோடும், வேதனையோடும் இருந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’  இந்த வார்த்தைகளை விசுவாசித்து தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
சிலர் நன்றாக ஜெபிப்பார்கள், ஆனால் விசுவாசம் குறைவாக இருக்கும், எவ்வளவுதான் நாம் ஜெபித்தாலும் விசுவாசம் நமக்கு குறைவாக இருந்தால் தேவனிடத்தில் இருந்து வரும் பதில் தாமதமாகும், தேவனிடம் இருந்து உடனே நாம் பதிலைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய விசுவாசம் அதிகமாக வேண்டும்.
ஜெபம் செய்கிற சூழ்நிலைகள் நமக்கு எதிராக இருக்கலாம், ஆனால் எல்லாம் அறிந்த தேவன் நமக்கு அருகில் இருக்கிறார். நம்பக்கத்து நியாயத்தை கேட்பதற்கு மனிதர்கள் தங்கள் செவிகளை விலக்கலாம், ஆனால் நீதி உள்ள நியாயாதிபதியாகிய நமது தேவன் நாம் ஜெபிக்கும் போது நம்பக்கத்து நியாயத்தை கட்டாயம் வெளிப்படுத்துவார்.
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எதிராக வருகிற எல்லாம் நமக்கு எதிராக அல்ல, நம்முடைய நம்பிக்கைக்கும் , விசுவாசத்திற்கும் எதிரானவைகளே, ஆகவே எந்த சூழ்நிலை வந்தாலும் நமது நம்பிக்கையும், விசுவாசத்தை மட்டும் நாம் இழந்து விடக்கூடாது.
இந்த உலகத்தில் நாம் எதை வேண்டுமானாலும் விட்டு விடலாம். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஒரு போதும் விட்டு விடக்கூடாது.

கூப்பிட்ட சத்தத்திற்கு பதில் கொடுப்பார்.
இயேசு கிறிஸ்துவின் நாட்களில் ஒரு சமயம் அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, திரளான மக்கள் அவரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.அந்த வேளையில் வழி ஓரமாக அமர்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த மனிதன் திரளான மனிதர்கள் நடந்து செல்லும் சத்தத்தை கேட்டு “ ஏன் இவ்வளவு கூட்டம் செல்கிறது, யார் போகிறார்கள்’’ என்று விசாரிக்கிறான். “நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்; இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
முன் நடப்பவர்கள் அவன் பேசாமல் இருக்கும்படி அவனை அதட்டினார்கள்; அவனோ; தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான் (லூக்கா 18:3638).
அவன் கூப்பிடுகிற சத்தத்தை கேட்டு இயேசு கிறிஸ்து நின்று அவனை தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். அவன் அவர் அருகில் வந்த போது அவர் அவனைப் பார்த்து, “நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றுஇருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஆண்டவரே நான் பார்வை அடையவேண்டும் என்றான்
இயேசு கிறிஸ்து அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்  (லூக்கா 18:41,42)
பிரியமானவர்களே, வழி ஓரமாய் அமர்ந்திருக்கும் மனிதர்கள் வழியில் யார் சென்றாலும் அவர்களை கூப்பிட்டு, தங்களுக்கு உதவி செய்யும்படி கேட்பார்கள்.
அதே போல இந்த மனிதனும் இயேசு கிறிஸ்து போகும் போது கூப்பிடுகிறான், அவன் கூப்பிட்டதும் இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்’’ என்று கேட்கிறார். ஏன் அப்படி கேட்டார் என்றால் எல்லா மனிதர்களையும் கூப்பிடுவது போல தன்னையும் கூப்பிட்டு உதவி கேட்கிறானா? அல்லது விசேஷமாக எதாவது கேட்கிறானா? என்பதற்காகவே அப்படி கேட்கிறார்.
அவனும் வழியில் செல்கிற எல்லோரிடமும் கேட்பது போல் இயேசு கிறிஸ்துவிடம் கேட்க வில்லை. மாறாக தனக்கு கண் தெரியாது ஆகையால் நான் பார்வை அடைய வேண்டும் என்று கேட்கிறான். பிரியமானவர்களே, அந்த பார்வைஇல்லாமல் இருந்த மனிதனின் விசுவாசத்தை பார்த்தீர்களா? அவன் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வல்லமையையும் அறிந்தவனாக இருக்கிறான். இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான். ஆகையால்தான் அவரிடம் தனக்கு தேவையானதை சரியாக கேட்டு, பெற்றுக்கொண்டான்.
நம்முடைய வாழ்விலும் கூட நமக்கு தேவையானதை சரியாக கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் தேவன் என்னுடைய வேண்டுதலை கேட்பாரா, கேட்க மாட்டாரா என்று இரு மனதுடன் நாம் இருக்க கூடாது, விசுவாசத்துடன் என்னுடைய வேண்டுதல்களை கர்த்தர் கேட்டு பதில் கொடுப்பார் என்ற விசுவாசத்துடன் கேட்க வேண்டும்.
சிலருடைய வாழ்க்கையில் அவர்கள் வேண்டுதல்களுக்கு தேவன் பதில் கொடுத்தும் கூட அதைப் பெற்றுக்கொள்வதற்கு, விசுவாசம் இல்லாமல் இருக்கிறவர்கள் உண்டு, நன்றாக வேண்டுதல் செய்வார்கள். ஆனால் அவர்களால் விசுவாசித்து தேவன் கொடுக்கும் பதிலை பெற்றுக்கொள்ள முடியாது. அல்லது தேவன் கொடுக்கும் பதிலை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். இது உண்மையா? எனக்கா தேவன் பதில் தந்தார் என்று திகைத்து நிற்பார்கள்.
நன்றாக வேண்டுதல் செய்வதற்கு மட்டுமல்ல, தேவன் கொடுக்கும் பதிலையும் விசுவாசத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த பார்வையற்ற மனிதன், வழி ஓரங்களில் அமர்ந்து, ஒரு வேளை உணவுக்காக வழியே செல்கிறவர்களை பார்த்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன். ஆனால் இயேசு கிறிஸ்துவை பார்த்ததும் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றப்போகிறவர் இவர்தான் என்பதை அவன் அறிந்து இருந்ததும், அவரை நோக்கி கூப்பிட்டதும், விசுவாசித்து பெற்றுக்கொண்டதுமே அவனுடைய வாழ்க்கையில் இருந்த இருளை நீக்கி, அதுவரை இல்லாத வெளிச்சத்தைக் கொண்டுவந்தது.
பிரியமானவர்களே அந்த மனிதன் இயேசு கிறிஸ்துவை கூப்பிடும் போது, சும்மா இரு சத்தம் போடாதே, அமைதியாக இரு என்று, அடக்கிய உலகம்தான் இன்றைக்கும் இருக்கிறது. உங்களையும் பார்த்து ஏன் இயேசு, இயேசு என்று ஓடுகிறாய் அமைதியாக இரு என்று உங்களை அடக்க பார்க்கலாம், அடக்கியவர்களின் வார்த்தைகளை கவனிக்காமல் அதிகமாக இயேசுவை நோக்கி கூப்பிட்டு, அற்புதத்தை பெற்றுக்கொண்ட மனிதனைப்போல, நீங்களும் இயேசு கிறிஸ்துவை கூப்பிடுவீர்கள் என்றால் கட்டாயம் உங்கள் வேண்டுதல்களையும் கேட்டு, உங்களுக்கும் இயேசு கிறிஸ்து அற்புதம் செய்வார்.
விண்ணப்பத்திற்கு பதில் தருவார்
வேதாகமத்தில் தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுத்துள்ளதை எத்தனையோ சம்பவங்கள் நமக்கு காண்பித்தாலும் சிலவற்றை மட்டும் நம்முடைய விசுவாச வளர்ச்சிக்காக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த வரிசையில், பழைய ஏற்பாட்டில் அன்னாளின் வேண்டுதல்களை நாம் மறந்து விட முடியாது. மலடி என்று மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு, வேதனையிலும் துக்கத்திலும் இருந்த அன்னாள், தேவ சமுகத்தில் அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி (1 சாமுவல் 1:10) னாள் என்று வேதம் கூறுகிறது.
அவள் தன்னுடைய மனதின் வேதனைகளை மனிதர்களிடத்தில் அல்ல, தேவனிடத்தில் தெரியப்படுத்தினாள். தன்னுடைய நிலைகள் மாறவேண்டும் என்று தேவனை நோக்கி வேண்டுதல் செய்தாள்.
நாள் தோறும் தன்னுடைய இருதயத்தில் தேவனிடத்தில் பேசினாள். என்னுடைய அவமானம் நீங்க வேண்டுமே, என் நிந்தைகள் மாறவேண்டுமே என்று தேவனை நோக்கி தன் இருதயத்தை ஊற்றினாள்.
வேதம் கூறுகிறது, “சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக’’ (1சாமுவேல் 1:17). இந்த வார்த்தையின்படி “கர்த்தர் அவளை நினைத்தருளினார்’’ (1சாமுவேல் 1:19) அவள் தன்னுடைய மலட்டுதன்மை நீங்கி பிள்ளைகளைப் பெற்றாள் என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே, உங்களுக்கு வர வேண்டிய ஆசீர்வாதங்கள் வராதபடிக்கு தடை செய்கிற எந்த மலட்டுதன்மையானாலும் சரி அவைகளை இப்பொழுதே  கர்த்தர் மாற்றுவார். சோர்ந்து போகாமல் கர்த்தரை நோக்கி விசுவாசத்துடன் விண்ணப்பம் செய்யுங்கள். கட்டாயம் கர்த்த் உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து உங்களை உயர்த்துவார்.
சோர்ந்து போகாதிருங்கள். விரக்தியடையாதிருங்கள் நிச்சயமாக உங்கள் வேண்டுதல்களுக்கு பதில் உண்டு. இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் போதே கர்த்தருடைய வல்லமையை உங்களால் உணர முடியும். உன்னத தேவனை நோக்கி வேண்டுதல் செய்யுங்கள். என்ன காரியமாக இருந்தாலும் சரி, உங்களை இதுவரை கண்ணீர் விட வைத்து, உங்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் எப்படிப்பட்ட போராட்டமானாலும் சரி, கர்த்தர் இப்பொழுதே மாற்றுவார்.
பயப்படாதிருங்கள். உங்கள் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டு கர்த்தர் பதில் கொடுப்பார். உங்கள் வாழ்க்கையை கலங்கடித்துக்கொண்டிருந்த எல்லா இக்கட்டுகளில் இருந்தும் உங்களை கர்த்தர் மீட்டு, உங்களை சாட்சியாக நிறுத்துவார்.
உங்கள் சாட்சியை கெடுக்கும்படியாக, உங்களை அவமானப்படுத்தும்படியாக உங்களுக்கு எதிராக எழும்பிய எல்லா சத்துருவினுடைய தந்திரங்களையும் முறியடித்து, கர்த்தர் உங்களை சாட்சியாக நிறுத்துவார். அது மட்டுமல்ல, உங்களை கர்த்தர் உயர்த்தி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்.
வீணான அவமானங்கள், உயர்வுக்கு தடைகள், குடும்ப சமாதானத்திற்கு எதிரான செயல்கள் எல்லாவற்றையும் கர்த்தர் மாற்றுவார்.  உங்கள் கண்ணீர் மாறும், கவலைகள் மாறும், துக்கங்கள் மாறும், வேதனைகள் மாறும் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள். அவரை நோக்கி வேண்டுதல் செய்யுங்கள். அவர் கைவிடுகிற தேவன் அல்ல, கரம்பிடித்து தூக்கி விடுகிற தேவன். உங்கள் வியாதிகள் மாறும். உங்கள் சாபங்கள் மாறும். பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவே எனக்கு இரங்கும், என் பாவத்தை மன்னியும், என்னை ஆசீர்வதியும் என்று இப்பொழுதே, இந்த செய்தியை வாசிக்கிற இந்த வேளையில்தானே, வேண்டுதல் செய்யுங்கள். இன்றே உங்கள் வாழ்வில் விடுதலையின் நாள், இன்றே உங்கள் வாழ்வில் அற்புதத்தின் நாள் எதைக் குறித்தும் கலங்காதீர்கள், பயப்படாதீர்கள் கர்த்தர் உங்களோடு இருந்து உங்களுக்கு நியாயம் செய்வார். உங்கள் நீதியை வெளிப்படுத்துவார். நீங்கள் வெட்கப்பட்டு போவது இல்லை.
உங்களை வெட்கப்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும். உங்களை தலை குனிய செய்ய வேண்டும் என்று யார் யார் உங்களுக்கு எதிராக எழும்பினார்களோ, அவர்கள் வெட்கப்பட்டு, அவமானப்பட்டு, தலைகுனிந்து நிற்பார்கள்.
இதுதான் கர்த்தரின் நீதி, இதுதான் கர்த்தரின் நியாயம், நீதியுள்ளவர்களுக்கு நீதி செய்கிற தேவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அநீதி ஆட்டம் போடலாம், ஆனால் நீதியின் தேவனுக்கு முன்பாக தோற்றுப்போகும்.
இந்த உலகத்தின் நீதி செத்துப்போகலாம், தேவனுக்கு முன்பாக நீதி செத்துப்போகாது. எனவே சுய நீதி உள்ளவர்களாக அல்ல, தேவ நீதி உள்ளவர்களாக இயேசு கிறிஸ்துவை சார்ந்து, அவரிடத்தில் நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்போம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.
ஜெபிப்போம். ஜெயம் பெறுவோம். கர்த்தர் நமக்கு துணையாக இருக்கிறார்.



1 comments: