Bread of Life Church India

ஆசீர்வாதமான மழை பெய்யும்

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்     பெய்யப்பண்ணுவேன்;

ஆசீர்வாதமான மழை பெய்யும். (எசேக்கியேல் 34:26) மழை நன்மைகளுக்கும், உயர்வுக்கும் அடையாளமாக இருக்கிறது.
              இந்த வருடத்தின் இரண்டாம் மாதத்திற்குள் பிரவேசித்திருக்கும் அன்பு தேவ பிள்ளைகளே,

இந்த இரண்டாம் மாதத்தில் நம்முடைய வாழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆசீர்வாதமான மழையை தேவன் பெய்யும்படியாக அனுக்கிரகம் செய்யப்போகிறார்.
           நல்ல வழிநடத்துதல் இல்லாமல் நம்முடைய வாழ்வு மிகவும் வறட்சியாக இருந்திருக்கலாம். எந்த விதமான உயர்வும் இல்லாமல் மங்கிய நிலையில் இருந்திருக்கலாம். ஆனால் கர்த்தர் இந்த மாதத்திலே உங்கள் குடும்பத்தில் “ஆசீர்வாதமான மழை பெய்யும்’’ என்று வாக்கு பண்ணுகிறார்.
சில கால சூழ்நிலைகளில் மழை இருக்கவே இருக்காது, மழை இல்லாமல் போகும் காலங்களில் பஞ்சங்களும், பஞ்சங்களினால் ஏற்படுகிற பட்டினிகளும் மனிதருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி விடுகிறது உண்டு.
               அது போல இதுவரை உங்களுடைய உழைப்புக்ள் வீணானது போல இருந்திருக்கலாம். “நான் எவ்வளவோ, பிரயாசப்பட்டும் ஒன்றும் எனக்கு கை கூடி வரவில்லையே’’ என்று மிகவும் கலங்கிப் போன நிலையில் நீங்கள் இருக்கலாம். இந்த மாதத்திலே  ஆண்டவர் கொடுக்கும் இந்த வாக்குத்தத்ததை பிடித்து ஜெபியுங்கள் இந்த மாதத்தில் கர்த்தர் உங்கள் வாழ்வில் மகத்தான காரியங்களை செய்யப்போகிறார்.
            அப்படியானால் இதுவரை என்னுடைய உழைப்பும் பிரயாசங்களும் எங்கே போனது, ஏன் இதுவரை என்வாழ்வில் உயர்வு இல்லை? என்று நீங்கள் நினைப்பது உண்மைதான்.
              உங்கள் உழைப்பும், உங்கள் பிரயாசங்களும் உண்மைதான். ஆனால் அது நல்ல பலனை கொடுக்காமல் போனதற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் விதைத்த உழைப்பு என்ற விதை, பிரயாசம் என்ற விதை இதெல்லாம் மண்கட்டிகளுக்குள் சிக்கி மக்கிப் போயிற்று. அது விளைந்து உங்களுக்கு பலன் கொடுக்காமல் போனதற்கு காரணம் விதை வளர்வதற்கு தேவையான மழை பெய்யாமல் போனதால்தான்.
   “விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்துபோகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின’’ (யோவேல் 1:17).
     எவ்வளவுதான் நாம் உழைத்தாலும், பிரயாசங்கள் பட்டாலும்  ஆசீர்வாதங்களை கட்டளையிடுகிறவர் தேவனே. இந்த உண்மையை நாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
           விதைக்கப்பட்ட விதைகள் நல்ல செழிப்பாக வளர வேண்டுமானால், அதற்கு மழை அவசியம். மழையின் அவசியத்தை நன்கு அறிந்திருப்பவர்கள் மழைக்காக எப்போதும் வேண்டுதல்களோடும் விண்ணப்பத்துடனும் இருப்பார்கள்.
          விதைகளை விதைக்கும் விவசாயிக்கு நன்றாக தெரியும். விதைக்கும் போது மழை பெய்ய வேண்டும். வளர்வதற்கும் மழை அவசியம். அறுவடை செய்வதற்கும் மழை அவசியம். இவைகளை எல்லாம் உருவகமாக வைத்தே தேவன் நமக்கு வேதாகமத்தில் இருந்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்க விரும்புகிறார். இதை நாம் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
        நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய துணையில்லா விட்டால், கர்த்தருடைய ஆசீர்வாதம் இல்லாவிட்டால் எந்த விதமான உயர்வும் இருக்காது.
     அதனால்தான் வேதம் கூறுகிறது. “பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்’’ (சகரியா 10:1). நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தேவன் நம்மை பாதுகாத்து போஷிக்கும் படியாக கர்த்தரையே நாம் அண்டிக்கொண்டு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யவேண்டும்.
             மழை இல்லாத நாட்களிலே நிலங்கள் எப்படி இருக்குமோ, அது போல உங்கள் வாழ்விலும் சரியான வழிநடத்துதலும், உங்களுக்கு வேண்டிய செழிப்பும் இல்லாமல், பற்றாக்குறைகளும், கவலைகளும், வேதனைகளுமாக இருந்து, கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விலும், உங்களுடைய பொருளாதார வாழ்விலும் உயர்வு இல்லாமல், வறட்சியாக இதுவரை இருந்து வரலாம்.
          ஆனால் இதுவரை உன் வாழ்வை  வறட்சியடைய செய்து, ஆசீர்வாதமான மழையை பெய்ய விடாமல் தடுத்து வந்த  எல்லா தந்திரமான பிசாசின் செயல்களையும் அழித்து,  உன் வாழ்வில்  ஆசீர்வாத மழையை பெய்ய செய்து, செழிப்பையும், உயர்வையும்  பெற்றுக்கொள்ளும் படியாக செய்வேன் என்று இந்த வார்த்தைகளின் மூலமாக கர்த்தர் உங்களிடம் பேசுகிறார். இதை வாசித்துக்கொண்டிருக்கிற அன்பான சகோதர, சகோதரிகளே, கர்த்தரை மட்டும் சார்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் தருகிற உயர்வை பெற்றுக்கொள்வீர்கள்.

தனிப்பட்ட வாழ்வில்

         நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவுக்காக நாம் எந்தளவுக்கு நம்மை அற்பணிக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய ஆசீர்வாதத்தின் அளவு அதிகமாகும்.
     எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். (எபிரெயர் 6:7).
நமக்கு தேவன் கொடுக்கிற ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் படியாகவே தேவன் ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார்.
             அவ்விதமாக தேவனுடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் மனிதனுடைய வாழ்வு தேவனால் மென்மேலும் ஆசீர்வதிக்கப்பட்டு, மிகுந்த செழிப்புள்ளதாக இருக்கும்.
வறட்சியான வாழ்க்கை என்பது யாருக்கும் பயன்படாத வாழ்க்கை. செழிப்பான வாழ்க்கையோ அநேகருக்கு பயனுள்ள வாழ்க்கையாக இருக்கும். நம் வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
           நீங்கள் இரட்சிக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக உண்மையாக  இருப்பீர்கள் என்றால் உங்கள் வாழ்வில் இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் பெருகும். “நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்’’ (ஏசாயா 12:3).
          இயேசு கிறிஸ்துவினால் விடுதலை பெற்றவர்களின்  வாழ்க்கையில் தான் இரட்சிப்பின் ஊற்றுக்கள் சுரக்கும். அந்த மகிழ்ச்சியைதான் அநேகருக்கு கொடுக்க முடியும்.
     தேவனுக்கு பயந்து கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கும் மனிதருடைய வாழ்வில் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை அளவில்லாமல் ஊற்றுகிறார்.
             எப்படி வானம் திறந்து மழையினால் பூமியை நனைக்கிறதோ, அது போல தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார்.
“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’’ (நீதிமொழிகள் 10:22) என்ற வேத வசனத்தின்படி கர்த்தருடைய ஆசீர்வாதம் மட்டுமே மனிதனுடைய வாழ்க்கையில் உயர்வை கொண்டுவரும். கர்த்தருடைய ஆசீர்வாதங்களினால் வருகிற உயர்வில் மட்டுமே வேதனை இருக்காது. துக்கம் இருக்காது, துயரம் இருக்காது. மகிழ்ச்சியும், சமாதானம் மட்டுமே இருக்கும்.
     அந்த மகிழ்ச்சியையும் சமாதானத்தையுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்க விரும்புகிறார். அதை பெற்றுக்கொள்வதற்கு நாம் எல்லோரும் தயாராக இருந்தாலும், அந்த ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதியுள்ளவர்களாக இருத்தல் அவசியம். அந்த தகுதியும் கூட நம்மால் உண்டாகிறது அல்ல, நம்மை தகுதி படுத்துகிறவரும் கர்த்தரே.

குடும்ப வாழ்க்கையில் 

         “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,

         என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்’’ (2 நாளா 7:13,14).
          சில வேளைகளில் தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழும் பொழுது தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை தாமே அடைத்து விடுவார்.
தேசத்தில் சில நேரங்கள் பஞ்சங்கள் தலைவிரித்தாடுவது ஏன்? தேவனுக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்து தேவனையே மக்கள் பரீட்சை பார்க்க முற்படும் போது தேவன் வானத்தை அடைத்து விடுகிறார்.
பூமி முளைக்காதபடி தடை செய்கிறார். ஆனால் தேவ ஜனங்கள் உண்மையாக தங்களை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, மனந்திரும்பி ஜெபம் செய்யும் போது, கர்த்தர் வானத்தை திறக்கிறார்.
     நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். “ஒருவேளை தேவனுக்கு பிரியமில்லாத எந்த செயலையாவது நான் தொடர்ந்து செய்து வருகிறேனா?’’ என்று பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. தேவனுக்கு பிரியமில்லாமல்

வாழ்ந்து கொண்டே தேவனுடைய ஆசீர்வாதங்களை ஒரு நாளும் பெற்றுக்கொள்ளவே முடியாது.
 

       நம்மிடம் உள்ள குற்றங்களை கர்த்தர் நமக்கு உணர்த்தி காண்பிப்பார் என்றால் தாமதம் இல்லாமல் இப்போதே நம்மை தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுத்து, மனந்திரும்பி, மன்னிப்பு கேட்டு, தேவனோடு ஒப்பரவாகி விடுவோம் அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் நல்லது.
கர்த்தருக்கு விரோதமாகவோ, தேவ பயமில்லாமலோ, தேவனுக்கு பிரியமில்லாமலோ வாழ்ந்து நம்மால் எதையும் சாதிக்க முடியாது. தேவனை சார்ந்து, தேவனிடம் தன்னை முழுமையாக அற்பணித்த மனிதனுடைய வாழ்க்கையே மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.
        இந்த வார்த்தைகளினால் கர்த்தர் உன்னிடம் பேசுகிறார். உன்னுடைய வாழ்க்கை இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக கட்டப்படவேண்டும். கர்த்தரை அறிந்தவன் என்று சொல்லியும் உன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மாய்மால வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இந்த மாய்மால வாழ்க்கையின் மூலமாக  உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்.
         இப்பொழுதே உன்னை முழுமையாக அற்பணித்து, மனம் திரும்ப வேண்டிய காரியங்களில் உண்மையாக மனம் திரும்பு.
அப்பொழுது “ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர்  உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்’’ (உபா 28:12).
        இந்த வார்த்தைகளுக்கு உங்களை முழுமையாக ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்ப வாழ்வில் ஆசீர்வாதமான மழையை பெய்யச்செய்து சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புவார்.

பொருளாதார வாழ்க்கை

   “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’’ (மல்கியா 3:10).
     புதிய ஏற்பட்டில் தசம்பாகம் என்று பிரிக்க முடியாது. என்றாலும் நம்முடையவைகள் எல்லாம் கர்த்தருக்கே சொந்தம். நம்மிடம் இருப்பது எல்லாம் கர்த்தர்தான் நமக்கு கொடுத்தது நம்முடையது எதுவும் இல்லை.
     தேவன் கொடுத்ததை தேவனுக்கு கொடுப்பதற்கு அநேகருக்கு பயம். தசமபாகம் கொடுக்க வேண்டுமா? காணிக்கை கொடுக்க வேண்டுமா? இது வேதாகமத்தின் முறைதானா? இது புதிய ஏற்பாடு விசுவாசிகளுக்கு உரியதா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்பவர்கள் யார் என்றால் தேவனுக்கு கொடுக்க மனம் இல்லாதவர்களே,
நாம் இப்பொழுது கொடுக்கும் தசமபாகம், காணிக்கைகள் எல்லாம் தேவனுடைய ஊழியம் பறந்து விரிந்து செல்வதற்காகவே. பத்தும் கர்த்தருக்குதான். பத்தில் ஒன்றாகிலும் கொடுத்து ஊழியம் செய்யவே விசுவாச மக்களாகிய நம்மை கர்த்தர் பயிற்றுவிக்கிறார். நம்மைப்போல  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். தேசம் முழுவதுமாக தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து அது அறிவிக்கப்படவேண்டும்.
            அதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து , விசுவாச வாழ்வில் வந்து விட்ட ஒவ்வொருவருடைய பங்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.
             அவ்விதமாக நாம் கர்தருடைய ஊழியங்களுக்கென்று கொடுக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் தேவன் ஆசீர்வாத மழையை பெய்யப் பண்ணுகிறார். கர்த்தருடைய ஊழியங்களுக்காக கொடுத்தவர்கள் குறைந்து போனதாக சரித்திரமே இல்லை.
           இந்த வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, கர்த்தருடைய வார்த்தையின் படியாக செயல்பட தயாராகி விட்ட நம்முடைய வாழ்வில் இனி எந்நாளும் ஆசீர்வாத மழைதான். கர்த்தர் இந்த மாதத்தில் நம்மை ஆசீர்வதித்து பெருக செய்யப்போகிறார். விசுவாசத்துடன் ஜெபித்து நாம் இந்த ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.





0 comments:

Post a Comment