Bread of Life Church India

கழுகிடம் கற்றுக்கொள்

“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது’’ ( சங்கீதம் 103:4,5).
கழுகின் சிறப்பு.
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன.
 பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் தன்னுடைய உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன.  பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன.
கழுகின் தன்மை
கழுகு உயரமான மரங்கள், மலைச்சரிவுகளில் கூடு கட்டுகின்றன. மனிதனுக்கு கைகளில் எவ்வளவு பலம் இருக்கிறதோ, அதே பலம் கழுகுக்கு கால்களில் இருக்கிறது.   இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன. இவைகளின் கண் மிகவும் கூர்மையானது. மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி,  இரையை தனது கால்களில் இடுக்கி தூக்கிச்சென்று உண்ணும். மிக உயரத்திலே பறந்தாலும்,  விமானத்தைவிட உயரமான தூரத்தில் இருந்தே, தனது இரையை கண்டுகொள்ளும்.  தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும்.. இதன் சராசரி வேகம் 150 கி.மீ. இது இரைக்காக மேலிருந்து கீழே பறந்து வரும் வேகம் கிட்டத்தட்ட 200 கி.மீ.
கழுகின் வைராக்கியம்
கழுகின் ஆயுசு நாட்கள் 40 ஆண்டுகள், ஆனால் தன் வைராக்கியத்தினால் 70 ஆண்டுகள் உயிர் வாழும். கழுகு 40 வயதை அடையும் போது அதிக கொழுப்பும், எடையும் கூடி தன் பலத்தை எல்லாம் இழக்கும். தான் பலவீனப்பட்ட அந்த சூழ்நிலையில் ஒரு முடிவு எடுக்கும். அந்த முடிவு என்னவென்றால் “இனி வாழ்வதா? சாவதா?’’
மிகக்கடுமையான தீர்மானத்துடன் ஒரு மலையின் உச்சிக்கு சென்று ஒரு கூட்டில் 5 மாதம் கிட்டத்தட்ட 150 நாள் அங்கு இருக்கும். அச்சமயத்தில் தன் அலகை பாறையில் கொத்தி கொத்தி உடைத்துவிடும். கொஞ்ச நாட்கள் கழித்து அலகு வளர ஆரம்பிக்கும். வளர்ந்ததும், தன் கால்களின் நகத்தை தன் புதிய அலகால் உடைத்துவிடும். அது புதிதாக முளைத்து வளர்ந்தவுடன் நகத்தால் தன்னுடைய இறக்கையின் சிறகையெல்லாம் பிடுங்கி விடும். பிறகு அதுவும் முளைத்து தன் எடை குறைத்து எல்லாம் புதியதாக மாறி இன்னும் இளமையாக 30 ஆண்டுகள் புதிய பலத்துடன் உயிர் வாழுமாம். அதற்காக 150 நாட்கள் கடுமையான பயிற்சி எடுக்கிறது.
ஒரு கழுகே இப்படி வைராக்கியமாக இருந்து சாதித்தால் தேவ பிள்ளைகளாகிய நம்முடைய வைராக்கியம் எங்கே?
பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து; கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்’’ ( ஏசாயா 40:31). வாழ்க்கையில் நமக்கும் சில நேரங்களில் வாழ்வா? சாவா? என்பது போல போராட்டத்தின் சூழ்நிலைகள் வரலாம்.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுகைப்போல, நாம் கர்த்தருடைய பாதத்தில் வைராக்கியத்தோடே காத்திருக்கிறவர்களாக இருப்போமானால் நிச்சயமாகவே, புதுபெலனை பெற்று நமக்கு எதிரான எல்லாவற்றையும் எளிதாக மேற்கொள்வோம்.  வெற்றியோடு வாழ்வோம்.


0 comments:

Post a Comment