Bread of Life Church India

விதை முளைக்கும் முன்....

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3).
"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே,  அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்'' (எபிரெயர் 16:14,15).
ஒருமனிதன் இயற்கை வளம் உள்ள இடத்தில் தனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று விரும்பி வெகு நாட்கள் சென்ற பின்பு, தன்னுடைய ஆசையின்படியாக வீட்டை கட்டினான்.
தனது வீட்டை சுற்றிலும் தோட்டம் அமைத்து மரம் செடி, கொடி, பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்று விரும்பினான். அதற்கு வேண்டிய விதைகளையும், செடிகளையும் வாங்கி வந்தான்.
வீட்டை சுற்றிலுமாக நன்றாக கொத்தி நிலத்தை பண்படுத்தி, விதைகளை போட்டான். செடிகளை நட்டினான். அதற்கு வேண்டிய உரங்களை போட்டு, தண்ணீர் பாய்ச்சி விட்டு, தனது வீட்டை சுற்றிலும் தான் விரும்புகிறபடி தோட்டம் அமைக்க வேண்டிய வேலை  முடிந்தது என்று மிகுந்த சந்தோஷத்துடன் அன்று இரவு தனது படுக்கைக்கு சென்றான்.
மறுநாளிலிருந்து, விதைகள் முளைத்து விட்டதா என்றும், தான் நட்டிய செடிகள் வளர்ந்திருக்கிறதா என்றும் ஒவ்வொரு நாள் காலையிலும் தோட்டத்தில் வந்து ஆர்வமாக பார்த்தான். ஒவ்வொருநாளும் அவனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ‘இன்றைக்காவது வளர்ந்திருக்காதா என்று ஒரு வாரமாக பார்த்தவனுக்கு மிகுந்த சோர்வு வந்து விட்டது.
‘ஏன் இன்னும் விதைகள் முளைக்க வில்லை என்று சிந்தித்தவன், ‘நான் போட்ட விதைகள் உள்ளே இருக்கிறதா? இல்லையா? பார்த்து விடலாம் என்று தான் எங்கு எல்லாம் விதை போட்டானோ, அவைகளை எல்லாம் தோண்டி பார்த்தான். விதைகள் அப்படியே இருந்தது. நான் விதைத்த விதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது, அப்படி இருந்தும் ஏன் இவைகள் முளைத்து எழும்பி வரவில்லை என்று நினைத்துக்கொண்டே, “சரி மறுபடியுமாக இவைகளை விதைத்து இன்னும் அதிகமான உரங்களை போடுகிறேன்’’ என்று சொல்லி விதைகளை போட்டு, நன்றாக உரங்களை போட்டு தண்ணீர் பாய்ச்சி மறுபடியும் முன்பு போலவே தினம் தோறும் வந்து பார்த்தான். ஒருவாரம் சென்றது. போட்ட விதை அப்படியே இருப்பதை கண்ட அவன் திரும்பவும் விதைகளை தோண்டி பார்த்தான். அவனுடைய அதிகப்படியான எதிர்பார்ப்பின் நிமித்தமாக   இப்படியே செய்து வந்தான். மாதங்கள் உருண்டோடின. ஆனால் விதைத்த விதைகளையோ அவன் முளைக்க விடவில்லை. அடிக்கடி தோண்டி பார்ப்பதனால்தான் விதைகள் முளைத்து எழும்ப வில்லை என்பதையும், விதைகள் முளைத்து எழும்பாததற்கு தான்தான் காரணம் என்பதை அவன் அறியாமலேயே இருந்தான்.
அந்த மனிதைப்போலவே இன்றும் அநேகர் நம்மை சுற்றிலுமாக வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு வேலையையும், தொழிலையும் நிரந்தரமாக செய்வதில்லை. ‘இதை செய்யலாமா? அதை செய்யலாமா? எப்போது பார்த்தாலும் குழப்பத்துடனும், எதை எடுத்தாலும் சந்தேகத்துடனுமே செயல்படுவதால், எதைச்செய்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு எதுவும் வாய்க்காததால் வாழ்க்கையில் உயர்வை காணமுடியாமல் மேலும் மேலும் விரக்தியடைந்து, வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.
எந்த தொழிலை, வேலையை கர்த்தர் கொடுக்கிறாரோ, அதை விசுவாசத்துடன், கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரை சார்ந்து, கர்த்தருக்குப் பிரியமாக இருந்து, கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்ததைப் பெற்று பொறுமையாக  காத்திருந்து, செயல்படும் பொழுது வாழ்க்கையில் கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
"ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்'' ( யாக்கோபு 1: 6-8).

0 comments:

Post a Comment