Bread of Life Church India

எறும்பின் வழியும், ஞானமும்



"அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு" ( நீதிமொழிகள் 30:25 )
தினமும் நம் வாழ்க்கையில் நாம் பார்க்கிற குட்டி உயிரினம் எறும்பு. வீட்டு மூலைமுடுக்குகளிலும் இண்டு இடுக்குகளிலும் சுற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கும். அதை ஒரு நாளும் நாம் ஒரு பொருட்டாக நினைத்தது கிடையாது.. உருவத்தில் நம்மைவிட ஆயிரம் மடங்கு சிறிய இந்த எறும்புகள் நம்மை கடிக்கும்போது ஒற்றைவிரலில் நசுக்கி கொன்று விடுவோம். அதை .யாராலும் முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பதே உண்மை
.
குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில் அல்லது குழுவில்) உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன.
எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
எறும்புகள் எப்போதுமே சுறு சுறுப்புடன் சுற்றிக்கொண்டிருப்பதை காணமுடியும். எதாவது திண்பண்டங்களை கண்டால் தனது சக்திக்கு மீறியும் எடுத்துக்கொண்டு சென்று சேர்த்து வைக்கும். எறும்புகள் ஒற்றுமை உள்ளதாக காணப்படும். நாம் கவனித்து பார்த்தால் அது வரிசையாக செல்வதும் வருவதுமாக இருப்பதை காணமுடியும்.
தனக்கு வேண்டிய ஆகாரத்தை சேர்த்து வைப்பதில் எறும்புக்கு நிகர் எறும்புதான். “நீ இப்படிதான் நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்வதற்கு எறும்புக்கு இராஜா இல்லை. தலைமை ஏற்று நடத்திச் செல்ல தலைவன் இல்லை. அதை வேலை வாங்குவதற்கு அதிகாரிகளும் இல்லை. அப்படி இருந்தும், தன்னுடைய வாழ்வாதாரத்தை தனது உழைப்பின் மூலம் பார்த்துக்கொள்கிறது. தான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சரியாக நடந்து கொள்கிறது. தனக்குத் தானே சுறு சுறுப்புடன் இருக்கிறது.
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக எறும்பை சொல்ல முடியும். எறும்புகள் எல்லாம் இணைந்து ஒற்றுமையாகவே செல்வதை காணமுடியும்.
பாம்பு புற்று என்று சொல்லுவார்கள். ஆனால் பாம்பு எப்போதுமே புற்று கட்டுவதில்லை. எறும்பு புற்றில்தான் பாம்பு வந்து தங்கி விடுகிறது. கவனிக்கப்படாத சத்துவமற்ற ( பலமற்ற) எறும்பு தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சில கால வாழ்வை எவ்விதமாக ஒருவரையும் சார்ந்திராமல் வாழ்கிறது என்பதை இவைகள் எல்லாம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
சுறு சுறுப்பு, ஒற்றுமை, மற்றதை சாராதிருத்தல், உணவை சேகரித்து வைத்தல், என்று எறும்பின் வழியும், ஞானமும் நம்மை வியக்க வைக்கிறது. தேவனின் படைப்பில் மிக மிக அற்பமான உயிரினமே இவ்வளவு ஞானமாக இருந்தால், தேவனின் படைப்பில் சிகரமாக இருக்கும் மனிதன் எப்படி இருக்க வேண்டும்.
ஆனால் எல்லாவகையிலும் ஒன்றும் குறைவில்லாமல் படைக்கப்பட்டுள்ள மனிதனின் நிலை என்ன? அதைக்குறித்துத்தான் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்’’ ( நீதிமொழிகள் 6: 6-11).

0 comments:

Post a Comment