Bread of Life Church India

ஜெபத்தின் மேன்மை

ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் மகத்தான செயல்களை செய்யக் கூடியது. ஜெபம் செய்யக்கூடிய நபர் எதைக்குறித்தும் பயப்படவோ, கலங்கியோ, கவலைப் பட்டோ நிற்பதில்லை. காரணம் கர்த்தர் ஜெபிக்கிற மனிதரோடு எப்போதும்
இருக்கிறார்.
    ஜெபம் அநேகருக்கு கடினமானதாக இருக்கிறது. அல்லது ஜெபிக்கும் படியான நேரத்தை சரியாக அமைத்துக்கொள்ளாமல், தனக்கு ஜெபிக்கவே நேரம் இல்லை என்று
சொல்லுகிறவர்களாக இருக்கிறார்கள்.

    சிலருக்கு ஜெபம் என்றவுடனே தூக்கம் வந்துவிடும். ஜெபிக்க வேன்டும் என்ற ஆசையிருக்கும் ஆனால் ஜெபிக்கவோ அவர்களால் முடியாத அளவுக்கு சோர்வுகள் அதிகமாக அழுத்தும். சிலருக்கு குழுவாக அமர்ந்து ஜெபிக்கும் போது நன்றாக ஜெபிப்பார்கள். ஆனால் தனிஜெபமென்பது இருக்காது, தனியாக அமர்ந்து எப்படி ஜெபிப்பது என்று அப்படிப்பட்டவர்களுக்கு தெரியாது. இந்த செய்தி ஜெபத்தின் மேன்மையையும், எப்படி ஜெபிப்பது என்பதைக்குறித்தும் தேவ ஆவியானவரின் ஒத்தாசையுடன் எழுதப்பட்டது, இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் போதே
ஜெப ஆவியை பெற்று, உங்கள் குழு ஜெபத்திலும், தனி ஜெபத்திலும் வளர்ந்து ஆசீர்வாதமாக இருக்கப்போகிறீர்கள். அதுமட்டுமல்ல, அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கப்போகிறீர்கள். ஜெபத்துடனே தொடர்ந்து வாசிப்போம்.
சுலபமாக ஜெபிப்பது எப்படி?
    ``நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்''
            <1 யோவான் 5:14,15>
    நாம் ஜெபத்தில் அமரும் முன்பாக நான் தேவனிடம் பேசப்போகிறேன், நான் பேசுவதை தேவன் கேட்கப்போகிறார் என்ற எண்ணத்துடன் நாம் ஜெபத்தில் அமரவேண்டும். நாம் ஜெபத்தில் பேசுவது மட்டுமல்ல, நாம் பேசுவதை தேவன் கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நம்மை அதிக நேரம் ஜெபம் பண்ண வைக்கும். நேரம் போவதே தெரியாத அளவுக்கு நம்மை ஜெபிக்கவைக்கும். நாம் தனிமையாக இருக்கிறோம் என்று நினைத்து விட்டால் நமக்கு ஜெபம் அதிக நேரம் ஓடாது. தூக்கம் வந்து விடும், எனக்கு எதிரே இயேசுவானவர் இருக்கிறார் என்ற
எண்ணமே நம்மை உற்சாகமாக
ஜெபிக்க வைக்கும்.
    அது மட்டுமல்ல, நாம் கேட்கிற எல்லாவற்றையும் தேவன்
நிறைவேற்றி கொடுப்பார் என்றால் நம்மால் தேவ சமூகத்தைவிட்டு சீக்கிரமாக எழுந்துவர முடியுமா?
மேலும் ஜெபமென்பது நாம் தேவனிடத்தில் பேசுவது மட்டுமல்ல, தேவன் நம்மிடத்தில் பேசுவார். உதாரணத்திற்கு நாம் நமக்கு தெரிந்த
ஒருவரை பார்த்து பேச வேண்டும் என்று, நேராக நாம் சொல்ல வேண்டியதை எல்லாம் மனப்பாடமாக அப்படியே ஒப்பித்து
விட்டு, அவர் என்ன பதில் சொல்கிறார்
என்பதை கேட்காமல் வருவதில்லை.
ஆனால் ஜெபத்தில் மட்டும்தான் அப்படிப்பட்ட தவறை செய்கிறோம்.
ஜெபமென்பது கடமைக்காக செய்யப்படுவது இல்லை, எழுதிவைத்து ஒப்பிப்பதும் அல்ல என்பதை நாம் புரிந்து கொண்டால்
ஜெபம் நமக்கு கடினமாக அல்ல, சுலபமாகவும் அனுதினம் நாம் விரும்பி செய்வதாகவும் மாறிவிடும்.
ஒருவரும்  ஜெபம் பண்ணு, ஜெபம் பண்ணு, என்று கட்டாயப்படுத்த
வேண்டிய அவசியமே
இல்லை.
ஜெபம் வாழ்க்கையை புதிப்பித்துக் கொண்டே இருக்கும்
    ``கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.''
< ஏசாயா 40:31>.
    ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் என்ன செய்கிறது என்றால், நம்மை ஒவ்வொருநாளும்
மறுரூபப்படுத்துகிறது. கர்த்தருக்குள்ளாக இருந்து, கர்த்தரை
அறிந்து கொள்ளச்செய்கிறது. நம்முடைய வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய சித்தத்தை தெரிந்து கொள்ளச்செய்கிறது. தேவன் எவ்விதமாக நமது வாழ்வில் செயல் படுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள
செய்கிறது. கர்த்தர் நம்முடைய வாழ்வில் செயல்படுவதற்கு நம்மைக்
காத்திருக்கச்செய்கிறது.
    இப்படியாக ஜெபம் நமது வாழ்வில் நம்மை புதுப்பித்துக்
கொண்டே இருக்கிறது. நாம் வாழ்க்கை என்ற பயணத்தில் அதிகமாக சோர்ந்து போகிறோம். ஜெபம் நம்மை சோர்விலிருந்து உடனடியாக விடுவிக்கிறது. என்ன செய்வதென்று அறியாமல் நிற்கும்
போது சரியான ஆலோசனையை பெற்றுக்கொள்ள கர்த்தரிடத்திற்கு உடனடியாக நம்மை நடத்துகிறது.
ஜெபம் சோதனைகளை ஜெயிக்க வைக்கும்  
    ``பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.''<மத்தேயு 26:40,41>.
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடத்தில்
பேசியது, அவர் தனக்காக ஜெபம் பண்ணும்படி சொல்லவில்லை. அவர்களுக்காக ஜெபிக்கும் படியாகத்தான் சொல்லுகிறார். ஒருவேளை அவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னதுபோல ஒருமணி
நேரம் ஜெபித்திருந்தால் இயேசு கிறிஸ்துவை ரோம போர் சேவகர்கள்
பிடிக்கும்படியாக வந்தபொழுது பயந்துசிதறி ஓடியிருக்க மாட்டார்கள். எனவே ஜெபம் நம்மை சோதனை
நேரங்களில், சோதனையை ஜெயிக்க
வைக்கிறது. திடமனதுடன் நாம் செயல்படுவதற்கு ஜெபம் நமக்கு உறுதுணையாக இருக்கிறது.அது மட்டுமல்ல வருங்காரியங்களை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.
    ஒரு சமயம் தனக்கு ஜெபிக்கும் படியாக கேட்டு சகோதரன்
ஒருவர் வந்தார். அவரிடத்தில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று
கேட்டபோது, அவர் மிகுந்த மனவருத்தத்துடன் அநேக காரியங்களை சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு அவருக்காக ஜெபித்து, சில ஆலோசனைகளைக்கொடுத்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக விசுவாசியுங்கள். உங்கள் வாழ்வில் இருக்கும் எல்லா சோதனைகளிலிருந்தும், நெருக்கத் திலிருந்தும் ஆபத்திலிருந்தும், இயேசு கிறிஸ்து விடுதலை தருவார் என்று சொல்லி, நீங்களும் இயேசுவே என்று கூப்பிட்டு ஜெபியுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.
    மறுபடியுமாக சில நாட்கள் கழித்து அவர் என்னைப்பார்க்கும் படியாக வந்தார். அப்பொழுது நான் அவரிடத்தில் விசாரித்தேன். ``இப்போது உங்கள் குடும்ப சூழ்நிலை
எப்படி இருக்கிறது என்று கேட்ட போது, உங்களிடம் வந்து ஜெபித்துக்கொள்வதற்கு முன்புவரை
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத
சூழ்நிலைதான் இருந்தது. ஆனால் உங்களிடம் வந்து ஜெபித்துக் கொண்டு சென்ற பிறகு,   எப்படியாகிலும் இந்த ஆபத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்னையும், குடும்பத்தையும் விடுவித்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அது மட்டுமல்ல மிகுந்த பயத்தின் மத்தியில் இருந்த நான் இப்போது, சமாதானத்துடன் இருக்கிறேன். என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து ஜெபங்களில் கலந்து கொண்டார். தேவன் அவருடைய வாழ்க்கையில் அற்புதம் செய்து அவர் வாழ்க்கையில் இருந்த எல்லா  போராட்டமான சூழ்நிலைகளையும் மாற்றினார்.
    பிரியமானவர்களே, நாம் ஜெபிக்கிறவர்களாக இருந்தால் எந்த சூழ்நிலையில்இருந்தும், நாம் வெளியே வருவதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை கொடுத்து நடத்துவார்.
    பிரச்சனையான, சோதனையான சூழ்நிலையில் நாம் ஒருவருக்காக ஒருவர் பாரத்துடன் ஜெபிக்க வேண்டும். அதே சமயம் தனி ஜெபமும் நமக்கு அவசியம். நாம் ஜெபித்துக்கொண்டே இருந்தால்
நமக்கு எப்போதும் வெற்றியே, எதைக்கண்டும் நாம் பயந்து ஓடி ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, ஜெபம் நமக்கு தேவனிடத்திலிருந்து பதிலைக் கொண்டுவரும்.
ஜெபம் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
    ``கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
    நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.'' <லூக்கா 22:31,32>. ஜெபம் செய்கிறவர்களின் ஆவிக்குரிய வாழ்வில் பின்வாங்குதல் வரவே வராது. ஏனென்றால் ஜெபம், விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும். பயத்தையும் திகிலையும், விரட்டிக்கொண்டே இருக்கும்.
    ஜெபம் செய்யாதவர்கள் எளிதாக பிசாசினால் ஏமாற்றப்பட்டு, பின்வாங்க ஆரம்பித்து விடுவார்கள். தேவை இல்லாத எண்ணங்களையும், சிந்தனைகளையும் கொடுத்து, பிசாசு எப்போதும் பின்வாங்கிப் போகும் படியாக செயல்பட்டுக்கொண்டே இருப்பான். நாம் ஜெபத்தில் தரித்திருக்கும் பொழுது பிசாசின் தந்திரங்களை சரியாக அறிந்து ,அவனை மேற்கொள்ள ஜெபம் நமக்கு உதவி செய்கிறது.
    ஆதனால்தான் வேதம் சொல்லுகிறது.``எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.''
<எபேசியர் 6:18>. ஜெபம் தேவனோடுள்ள நமது உறவை பலப்படுத்தும். எந்த சூழ்நிலையிலும்
இயேசு கிறிஸ்து என்னை கை விடமாட்டார் என்ற தைரியம் நமக்கு உண்டாயிருக்கும். ஜெபிக்காதவர்களின் வாழ்க்கையில் எப்போதும் தேவனைக் குறித்து முறுமுறுத்துக் கொண்டிருப்பார்கள். தேவன் எனக்கு என்ன செய்துவிட்டார் என்று தேவன் செய்த நன்மைகளை மறந்து பேசுவார்கள். ஜெபம் செய்கிறவர்களோ எப்போதும் தேவனை துதித்து மகிமைப்படுத்திக்கொண்டிருப்பார்கள்.
எல்லாம் அவர்களுக்கு நன்மையாகவே தேவன் செய்து கொடுப்பார். எனவே, கர்த்தருக்குள் அன்பானவர்களே, ஜெபம் நமது வாழ்வில்  பெரிய காரியங்களை செய்து நம்மை உயர்ந்த ஸ்தலத்திற்கு கொண்டு செல்லக்கூடியது இப்படிப்பட்ட ஜெபத்தை செய்யாமல் விட்டுவிடக்கூடாது. எப்போதும் ஜெபிக்கிறவர்களாக இருப்போம். உன்னத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!

7 comments:

  1. Very good message

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே, கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும், வந்து உங்கள் கருத்தை பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    ReplyDelete
  3. தேவனோடு இருந்த நான் இண்டர்னெட்டில் சாத்தானால் சறுக்கி விழப் பார்த்தேன், ஆனால் சாத்தான் வலை விரித்த அதே இண்டர்னெட் மூலமாக இயேசப்பா என்னை தூக்கி எடுத்தார்.... கர்த்தருக்கே ஸ்தோத்திரம்...... really a great message...

    ReplyDelete
    Replies
    1. அல்லேலூயா ! இயேசு நல்லவர். உங்கள் சாட்சியை உடனே பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது . தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.

      Delete
  4. ஜெபம் என்கிற ஆயுதம் அனேகருக்கு பயனுள்ளதாக இருக்க கர்த்தர் உதவி செய்வாராக ஆமேன்....

    தாங்கள் இன்னும் பல வல்லமையான செய்திகளை கொடுக்க கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.. ஆமேன் ஆமேன்....

    ReplyDelete
  5. ponraja PONRAJASINGH பிரதர், ஆமேன்.
    மிக்க நன்றி,

    ReplyDelete