Bread of Life Church India

சிறுமைக்கு பதில் சிங்காரம்

இம்மாதத்தில் தேவன் கொடுத்துள்ள வார்த்தைகளை தியானித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளப்போகிறோம்.      தேவரீர்; எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.<சங்கீதம் 90:15>.
    மோசேயினால் எழுதப்பட்ட 90ம் சங்கீதம் மோசேயின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சங்கீதத்தில் 39 வருட வனாந்திர வாழ்க்கையில் சந்தித்த சிறுமைகளையும், துன்பங்களையும் தேவனிடத்தில் ஜெபமாக மோசே ஏறெடுக்கிறார்.
அதுமட்டுமல்ல கானானுக்குள் போக போகிற அந்த நேரத்தில் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் இதுவரைக்கும் பட்ட சிறுமைக்கும், துன்பத்திற்கும் சரிநிகராக இனி வரும் நாட்களில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று முறையிடுகிறார்.

    கர்த்தர் ஏன் இஸ்ரவேல் ஜனங்களை சிறுமையின் பாதையில் நடத்தினார் என்று பார்க்கும்போது வேதம் சொல்லுகிறது, ``உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும் படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக் கொள்வாயோ கைக்கொள்ள மாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்'' <உபா 8:2,3>.
    தேவனுடைய மக்கள் எல்லாவற்றிலும் கர்த்தரையே சார்ந்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் விரும்புகிறபடி நாம் நமது வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தர் நடத்துகிற பாதையில் அவருடைய ஆலோசனையின்படி நடந்து கொள்ளும்போது கர்த்தர் எல்லா சிறுமையிலிருந்தும் நம்மை நீக்கி நாம் களிகூர்ந்து மகிழும்படியாக செய்கிறார். இதை அறிந்த மோசே அவ்விதமாகவே ஜெபத்தை ஏறெடுக்கிறார்.
    ``நாங்கள் எங்கள் வாழ் நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்'' <சங்கீதம் 90:14>. ஒரு வேளை இதை வாசித்துக்கொண்டிருக்கும் அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தேவன் சிறுமையை அனுமதித்திருக்கலாம். அதினாலே நீங்கள் மிகவும் சோர்ந்து போன நிலையில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இதுவரைக்கும் பட்ட எல்லா   துன்பங்களுக்கும், சிறுமைகளுக்கும் நிகராக கர்த்தர் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை தரப்போகிறார்.
    சிறுமை என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில்
1> அற்பம் (modicum) என்றும்
2> இழிவு (disgrace) என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது போல மற்றவர்கள் உங்களை அற்பமாக, இழிவாக எண்ணக்கூடிய அளவுக்கு உங்கள் வாழ்க்கைஇருந்திருக்கலாம்.
    பிரியமானவர்களே, கர்த்தர் இந்த வார்த்தையின் மூலமாக இம்மாதத்தில் உங்களோடு பேசுகிறார். இனி உங்கள் வாழ்வில் சிறுமை என்பது இல்லை. இதுவரை நீங்கள் சிறுமைப்பட்ட இடத்தில் உங்களை உயர்த்தி உங்கள் வாழ்க்கையை சிங்காரமாக <இன்பமாக அல்லது இனிமையாக> மாற்றப்போகிறார்.
    ``சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன்...
எங்களுக்கு ஆறுதல் செய்தார்''
<2 கொரி 7:6>. சிறுமைப் பட்டவர்களின் வாழ்வை தேவன் அப்படியே விட்டு விடுகிறவர் அல்ல, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சிறுமைப்படுகிறான் என்றால் அவனுடைய வாழ்வு சரித்திரத்தில் இடம் பிடிக்கப்பட போகிறது என்பதுதான் சரித்திரம் சொல்லும் உண்மை. எனவே, சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களின் சிறுமையிலிருந்து தூக்கியெடுத்து உங்களை உயர்ந்த நிலையில் வைக்கப்போகிறார்.வேதாகம சரித்திரத்தில் சிறுமைப்பட்டிருந்த
வர்களின் வாழ்வை எப்படி கர்த்தர் மாற்றியிருக்கிறார் என்று வேதவசனத்தின் அடிப்படையில் தியானிப்போம். தொடர்ந்து ஜெபத்துடன் நீங்கள் வாசிக்கும் பொழுது கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் அற்புதம் செய்து உங்கள் சிறுமையை மாற்றி உயர்த்தப்போகிறார்.

சிறுமைப்பட்ட மக்கள் உயர்த்தப்பட்டார்கள்

    ``நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டு போவேன் என்றும் சொன்னேன் என்றார்''
<யாத் 3:17>. இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் அடிமைப் படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு மிகவும் அற்பமாக நடத்தப்பட்டார்கள். அவர்கள்  தினம் தினம் கண்ணீரிலும், கவலையிலும் வேதனையிலும், நெருக்கத்திலும் வாழ்ந்துவந்தார்கள். என்ன
செய்வதென்று அறியாத நிலையில் ``இஸ்ரவேல் புத்திரர் அடிமைத் தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து
முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது''<யாத் 2:23>. அவர்கள் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டார்களோ, அதற்கும் மேலாக தேவன் அவர்களை உயர்த்தி சரித்திரத்தால் அந்த மக்களை பிரிக்க முடியாத அளவுக்கு மேன்மையாக வைத்தார். அது மட்டுமல்ல உலக இரட்சகரான இயேசுகிறிஸ்துவை உலகிற்கு கொடுத்தது  அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடமிருந்தே, உலகிலிருக்கும் அத்தனை மக்களுக்கும் விடுதலை கொடுக்கும் படியாக இயேசுகிறிஸ்து இப்பூமிக்கு வந்தார்.
    சிறுமையோடு வாழ்பவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டே  தொடர்ந்து இருக்க தேவன் ஒருநாளும் அனுமதிக்கவே மாட்டார். பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையும் அடிமைத்தன வாழ்வு போல மிகவும் சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கலாம், கர்த்தர் உங்களைப்பார்த்து சொல்லுகிறார் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் நிமித்தமாக நீங்கள் இருக்கும் பகுதியில் சிறுமைப்பட்டு, வேதனையோடு நீங்கள் இருக்கலாம்.
ஒருகாலத்தில் நான் எப்படி இருந்தேன், எப்படியெல்லாம் பிள்ளைகளை குறித்து மனக்கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் என்பிள்ளைகள் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் உலக சிற்றின்பங்களினால் பிள்ளைகள் அடிமைப்படுத்தப்பட்டு, என்னுடைய கனவெல்லாம் இடிந்து எல்லாம் தவிடு பொடியாக போய் விட்டதே, குடும்பமே சிறுமைப்பட்டு நிற்கிறதே, இதற்கு இனி என்ன தீர்வு? என் குடும்பம் மறுபடியும் உயர்த்தப்படுமா? என் பிள்ளைகள் இந்த உலக அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் படுவார்களா? என்ற கேள்வியுடனும், குழப்பத்துடனும் நீங்கள் இருக்கலாம். கர்த்தர் சொல்லுகிறது என்ன வென்றால் முன்பு இருந்த விசுவாசத்தைவிட உங்கள் விசுவாசம் மேலும் அதிகரிக்கட்டும். முன்பு இருந்த ஜெபத்தை விட இன்னும் ஜெபத்தை அதிகப்படுத்துங்கள். எல்லாம் முடிந்தது. என் குடும்பம் இனி வளராது. என் பிள்ளைகள் திருந்துவதற்கு இனி வழியே இல்லை
என்று ஒருபோதும் சொல்லாதிருங்கள்.
பிள்ளைகளின் அடிமைத்தனத்தை நீக்கி கர்த்தர் விடுவிப்பேன் என்று சொல்லுகிறார்.சிறுமைப்பட்ட உங்கள் வாழ்வை கர்த்தர் உயர்த்துவேன் என்று சொல்லுகிறார். இந்த வார்த்தைகளை விசுவாசித்து
 கர்த்தரை நன்றாக துதியுங்கள்.வரும்
நாட்களில் வித்தியாசத்தை காணப்போகிறீர்கள். அநேக குடும்பங்களுக்கு முன்மாதிரியாக உங்கள் குடும்பத்தை கர்த்தர் மாற்றப்போகிறார். அல்லேலூயா!!
    ஒரு சிலர் கடன்பட்டு, இருந்த வீடுகளை விற்று ஒன்றுமில்லாத நிலையில் இருப்பதினால் நீங்கள் சிறுமைப்பட்டு ஒடுங்கியிருக்கலாம். சில வாலிப பிள்ளைகளின் திருமணங்கள் தடைபட்டுக்கொண்டே இருப்பதினால் குடும்பத்தினராலும், உறவினர்களாலும், சுற்றிலும் இருப்பவர்களினாலும் சிறுமைப்ப டுத்தப்பட்ட சூழ்நிலையில் இருக்கலாம். உங்களின் சிறுமையை மாற்றி கர்த்தர் ஆனந்த களிப்புடன் வைக்கப்போகிறார். அப்பொழுது நீங்கள் யாவருக்கும் முன்மாதிரியாக இருப்பீர்கள்
.
சிறுமை செழிப்பாக மாறும்

    ``நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்
பண்ணினார்'' <ஆதி 41:52>. என்று யோசேப்பு சொல்லுகிறார்.
    தனது சகோதரர்களின் சதிவேலையினால்  விற்கப்பட்ட, யோசேப்பு, குழியில் தள்ளப்படுகிறார். இஸ்மவேலர்களுக்கு அடிமையாக விற்கப்படுகிறார். அவர்கள் எகித்தில் அடிமையாக விற்றுவிடுகிறார்கள். அடிமையாக வேலைசெய்யும் வீட்டில் முதலாளி அம்மாவினால் பிரச்சனை வருகிறது. அந்த அம்மாவின் ஆசைக்கு இணங்காததினால் வீண் பழி சுமத்தப்பட்டு சிறைச்சாலைக்கு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படியாக ஒவ்வொருவர் மூலமாகவும் வீண்பழி சுமத்தப்பட்டு,
அடிமைப்பட்டிருந்தப்பட்டு,சிறுமைப்படுத்தப்பட்ட, யோசேப்புவின் வாழ்க்கை சிறுமையோடு, போய்க் கொண்டிருக்கிறது.
    ஆனால் எந்த நிலையிலும் யோசேப்பு கர்த்தரை விட்டு விடவே இல்லை என்ன சூழ்நிலை வந்தாலும் கர்த்தரை மட்டுமே சார்ந்து கொண்டார். தேவன் யோசேப்போடு கூட இருந்தார். ஒரு நாளில் எந்த தேசத்தில் அடிமையாக விற்கப்பட்டு, சிறுமைப்பட்டிருந்தாரோ அதே தேசத்தில் யோசேப்பை உயர்த்தி, செழிக்க செய்தார். பொறாமையினால்
யோசேப்பை அடிமையாக விற்று சிறுமைப்படுத்தின சகோதரர்களே அவரை தேடி வரும்படியாக கர்த்தர் செய்தார்.
    யார் நம்மை சிறுமைப்பட வைத்தார்களோ அவர்களுக்கு முன்பாகவே நம்மை கர்த்தர் செழிப்போடு வாழவைப்பார்.
யோசேப்பின் வாழ்வில் அதுதான் நடந்தது. நீங்களும் சிறுமைப்பட்ட நிலையில் மன மடிவாக இருக்கிறீர்களோ? கர்த்தர் உங்கள் சிறுமையிலிருந்து தூக்கியெடுத்து செழிப்பாகவும், அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் வைக்கப் போகிறார். இது உங்களை ஆறுதல்படுத்துகிற வார்த்தைகள் மட்டுமல்ல! உங்கள் வாழ்வை மாற்றியமைக்கப் போகிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வாசித்துக்கொண்டிருக்கிற உங்கள் வாழ்வை கர்த்தர்  செழிப்படைய செய்யப்போகிறார் நீங்களே இதற்கு சாட்சியாக இருக்கப்போகிறீர்கள்.

சிறுமை சந்தோஷமாக மாறும்

    ``சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.''
<1 சாமுவேல் 1:11>
    குழந்தையில்லை என்பது ஒரு பெண்ணுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுக்கும். அது மட்டுமல்ல மற்றவர்களின் கேள்விகளும், இகழ்ச்சிகளும் துயரத்தை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அப்படித்தான் அன்னாளின் வாழ்க்கையிலும் தான் ஒரு மலடியாக இருப்பதாக மற்றவர்கள் பரியாசம் பண்ணுகிறார்களே என்று தேவசமூகத்தில் மனங்கசந்து அழுகிறாள்.
    ஏன் தன்னுடைய கர்ப்பத்தை கர்த்தர் அடைத்து வைத்திருக்கிறார் என்ற காரணத்தை அன்னாளினால் பல வருடங்களாக கண்டு பிடிக்க முடிய வில்லை. மற்றவர்களுக்கு முன்பாக சிறுமைப்பட்ட நிலையில் அவள் கர்த்தரை மட்டும் விடவே இல்லை. ஏனென்றால் கர்த்தர் தனக்கு ஒரு குழந்தையை கொடுப்பார் என்ற அசைக்க முடியாத விசுவாசம் அன்னாளுக்கு இருந்தது. ஆகையால்தான் கர்த்தர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார், நான் கர்த்தருக்கு என்ன பொருத்தனை செய்ய வேண்டும் என்று தனது மனதுக்குள்ளாகவே ஒரு தேடல் உண்டானது.  கர்த்தர் தனக்கு கொடுக்கும் பிள்ளையை கர்த்தருடைய வேலைக்கே அற்பணித்து விடுகிறேன் என்று பொருத்தனை செய்கிறாள், உடனடியாக கர்த்தர் அவளின் கர்ப்பத்தை திறந்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனை பெற்றெடுத்து தான் கர்த்தருக்கு பொருத்தனை செய்தபடியே அவனை கர்த்தருடைய வேலைக்கு கொடுத்து விட்டாள்.
    அவள் முதல் மகனான சாமுவேலை கர்த்தருக்கு கொடுத்த படியினால் பின்னும் கர்த்தர் அவளுக்கு 3 மகன்களையும் 2 மகள்களையும் கொடுத்தார் என்று வேதம் சொல்கிறது <1சாமு 2:21> அன்னாளின் சிறுமை நீங்கியது மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கையில் சந்தோஷம் நிறைவாக கிடைத்தது. அவளுடைய  வம்சம் விருத்தியடைந்தது. ஒரு அற்புதமான ஊழியக்காரன் சாமுவேலின் தாய் என்ற பெருமை அவளுக்கு கிடைத்தது.
    பிரியமானவர்களே;
உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்களும் அன்னாளைப்போல் சிறுமைப்பட்ட நிலையில் இருக்கலாம். சிறுமையின்
நிமித்தமாக நீங்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கலாம். இப்பொழுது கர்த்தர் உங்களிடம் என்ன எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, நீங்கள் என்ன பொருத்தனையோடு ஜெபிக்க வேண்டும்,  என்பதை உணர்ந்து ஜெபிக்கும்போது உங்கள் வாழ்வில் இருக்கும் தடைகளை கர்த்தர் மாற்றி உங்களுக்கு அற்புதம் செய்வார், உங்கள் கண்ணீர் ஆனந்த களிப்பாக மாறும்.

0 comments:

Post a Comment