Bread of Life Church India

நன்மையானதை கொடுக்கும் கர்த்தர்

 

             இம்மாத ஆசீர்வாத செய்தி ``கர்த்தர் நன்மையானதைத் தருவார்; <சங்கீதம் 85:12>. வேதாகமத்தில் கர்த்தர் நமக்காகவே எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும்  கொடுத்து இருந்தாலும். இம்மாதத்தில் விசேஷ விதமாக கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதம்தான்  ``கர்த்தர் நன்மையானதைத் தருவார் ''
    இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறுகிறது. ``அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்கு கிறவராயும் சுற்றித்திரிந்தார்'' <அப் 10:38> என்று.    
    நமக்கு எது நன்மையோ அதை மட்டும்தான் தேவன் நமக்கு தருவார். நமக்குள்ளாக எத்தனையோ விதமான எதிர்பார்ப்புகள், எவ்வளவோ விதமான கனவுகள். ஆனால் எல்லாம் நடக்காதது போலவும், நம்முடைய எதிர்பார்ப்புக்கு நேர் மாறாகவும் நடக்கிறதே என்றும் குழப்பமாக இருக்கலாம்.
    ஆனால் நடப்பது எல்லாம் நமது நன்மைக்காகவே, கர்த்தர் மிக சரியாக நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே சோர்ந்து போக வேண்டாம்.
    ஒரு சமயம் நண்பர் ஒருவர் நல்ல வேலைக்காக வெகு நாட்கள் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண்போகாமல்  அவர் எதிர்பார்த்த படியே அவருக்கு நல்லதொரு இடத்தில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது. அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேர்முக தேர்வை எதிர்பார்த்து அதற்காக  தயாராகி, வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக முன்பதிவில் பயண சீட்டும் முன்பதாகவே எடுத்து வைத்து அந்த நாளுக்காக காத்திருந்தார்.
    அந்த நாளும் வந்தது ஆனால் அவருக்கோ எழும்பவே முடியாத அளவுக்கு மிகுந்த ஜூரம். எவ்வளவோ முயற்சித்தும் முடியாது என்று அறிந்து, மிகுந்த மன வருத்தத்துடனும், வேதனையுடனும் பயணச்சீட்டை ரத்து செய்யச் சொல்லிவிட்டார். ஆனால் அவருடைய உடம்பு கொதிப்பதை விட மனம் கொதிக்க ஆரம்பித்து விட்டது.
    எவ்வளவு நாள் காத்திருப்பு, எவ்வளவுகால எதிர்பார்ப்பு,  சுலபமாக எல்லாம் கை நழுவி சென்று விட்டதே. இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது கஷ்டம்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று மிகுந்த முறு முறுப்புடன் காணப்பட்டார்.
    இது அவர் மனதை விட்டு அகலாமலே அந்த நாள் முழுவதும் இருந்தது.
    ஆனால் மறு நாளிலே வந்த செய்தி அவரை ஒரு நிமிடம் ஆடி போக செய்து விட்டது. அது என்ன வென்றால் இரயிலில் அவர் பயணம் செய்ய இருந்த பெட்டி தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி, அநேகர் உயிரிழந்தார்கள் என்பதே அந்த செய்தி. அவருக்கோ என்ன நடக்கிறது என்ற சுயநினைவை இழந்தது போல இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு, முந்தின நாள் அவருக்குள் வந்து போன முறு முறுப்புக்கள் ஞாபகம் வந்தது.  ``என்ன ஜெபம் செய்து என்ன ஆகபோகிறது,நமக்குமட்டும் எல்லாம் இப்படித்தான் கடைசி நேரத்துல வந்து தடையாக இருக்கும்''. அதுமட்டுமல்ல  இன்னும் எத்தனையோ விதமாக புலம்பியது ஞாபகத்தில் ஓட ஆரம்பித்தது.
    ஆனால் ஏன் அப்படி தடைவந்தது என்பதை அறிந்த போது அவரால் கர்த்தரை துதிக்காமல் இருக்க முடியவில்லை.
    சில மாதங்கள் சென்றது, அவர் எதிர்பார்த்ததற்கும் மேலான நல்ல வேலை அவருக்கு கிடைத்தது. இப்பொழுது அவருடைய வாழ்க்கை மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறது.     பிரியமானவர்களே! இப்படித்தான் நம்முடைய வாழ்விலும் சில சம்பவங்கள் நமக்கு தடை போல காணப்பட்டிருக்கும். அப்பொழுதெல்லாம் நாம் முறு முறுத்திருப்போம். ஆனால் கர்த்தர் நமக்கு நன்மையானதை மட்டுமே செய்திருப்பார்.
    ஒரு சிலருடைய வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். என்ன வென்றால் கர்த்தர் அவர்களின் வாழ்க்கையில் சில காரியங்களை வேண்டாம் என்று விலக்கி வைத்திருப்பார். ஆனால் அவர்கள் அதை விடாமுயற்சியுடன் அதுதான் வேண்டும் என்று எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதற்கு பின்பு அவர்கள் வாழ்நாளில் படுவார்கள் பாருங்க பாடு, அது வார்த்தையில் சொல்ல முடியாதவைகள்.
    அது திருமண காரியமாக இருக்கலாம். வேலையாக இருக்கலாம். அல்லது ஏதோ ஒன்றை வாங்குவதாக இருக்கலாம். அவசரம், அதுதான் வேண்டும் என்ற பிடிவாதம். கர்த்தர் எவ்வளவோ தடுத்து பார்ப்பார், இவர்கள் விடுவதாக இருக்காது கர்த்தர் விட்டுவிடுவார். பிறகு வாழ்க்கை முழுவதும் கண்ணீர்.
     இது ஆதியில் இருந்தே தொடர்கதையாக வந்து கொண்டு இருப்பவைகள்தான். வேண்டாம் என்று தள்ளிவைக்கும் கனிதான் ஏவாளுக்கு புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமுமாக <ஆதி 3:6> இருந்தது. இல்லாதவைகளையும் வேண்டாத வைகளையும் நினைத்து நினைத்தே வாழ்க்கை முழுவதையும் ஏமாற்றத்தில் தொலைத்தவர்கள் அநேகர்.
    பிரியமானவர்களே, கர்த்தர் நமக்கு கொடுத்தவைகள் நலமானவைகளே, உங்களை விட்டு விலகி போனவைகள். உங்களுக்கு வேண்டாதவைகளும் உங்கள் வாழ்க்கைக்கு தீங்கு இழைக்கக் கூடியவைகள் மட்டுமே, விலகி போவதை விரட்டி பிடிக்க முயற்சிக்காதீர்கள். அது உங்களுக்கு வேதனையை கொண்டு வரும். கர்த்தர் உங்களுக்கு நன்மையான வைகளை மட்டுமே தருவார்.
நன்மையினால் திருப்தியாக்குவார்
``என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.<எரே 31:14>.
    கர்த்தர் தரும் நன்மை எப்பொழுதுமே திருப்தியை கொடுக்கும். பிசாசு எப்பொழுதுமே கவர்ச்சியான வைகளை காண்பித்து ``பார் உனக்கு இது கிடைக்க வில்லை, அது கிடைக்க வில்லை என்று  சொல்லி திருப்தியற்ற நிலையை ஏற்படுத்தி, ஏமாற்றப்பார்ப்பான். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    அதே வேளையில் கர்த்தர் கொடுக்கும் நலமானவைகளையும் விட்டு விடக்கூடாது. கர்த்தர் கொடுக்கும் போது அதுவே நல்லது என்று அறியாமல், இதைவிட சிறந்ததை நான் எதிர்பார்க்கிறேன் என்று தட்டி விடக்கூடாது.
    தேவ சித்தத்தை சரியாக ஜெபத்தில் அறிந்து கொள்ள வேண்டும். சிலர் அடிக்கடி சொல்லுவதை கேட்டிருக்கிறேன். தங்கள் சுய இச்சையின்படி தங்கள் மனதுக்கு சரியாக தோன்றுபவைகளை, அதுதான் தேவ சித்தம் என்று சொல்லுகிறதுண்டு,
    தங்கள் இருதயம் ஏற்றுக் கொள்ளாதவைகள் தேவனுடைய சித்தமாக இருந்தாலும், அதை துணிச்சலாக இது தேவ சித்தம் இல்லை என்று தள்ளிவிடுவார்கள். ஆனால் அப்படி தள்ளிவிடுகிறவர்களின் வாழ்வைப் பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? வேதம் ஏசாவின் வாழ்க்கையைத்தான் முன் வைக்கிறது. ``ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாத த்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்;
           <எபிரெயர் 12:17>.
    ஆகவே நாம் எந்த விஷயமாக இருந்தாலும் அது தேவனுக்கு பிரியமானது தானா? என்பதை அறிந்து செயல்படுவோமானால் அதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது.
    இன்றைக்கும் அதிகமாக அநேகர் தவறுகிற, அல்லது தடுமாறுகிற இடம் எது என்று கேட்டால் அது திருமணக் காரியம்தான் என்பேன். இதில் வாலிப பிள்ளைகள்தான் தடுமாறுகிறார்கள் என்றால், சில பெற்றோர் அதை விட அதிகமாக தடுமாறுகிறார்கள்.
    வாலிப பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களையும் தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள துணிந்து விடுகிறார்கள். நாம் கேட்பதற்கு முன்பதாகவே, ``எப்படியாகிலும் நான் அவளை அல்லது அவனை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்து விடுவேன் பாருங்கள் என்று வீர ஆவேசமாக பேசுவார்கள். அதே நபரை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து பார்க்கும் போது, ஐயோ! அவர்கள் விடும் கண்ணீர் நம்மால் உண்மையாகவே பார்க்கமுடிவதில்லை.
    இதே போல சில பெற்றோர்களின் முடிவுகள் இது போலதான் வந்து முடிகிறது. எப்படியென்றால் பிள்ளைக்கு வயது அதிகமாகிக்கொண்டே போகிறது, ``இதற்கு மேலேயும் நான் சும்மா இருந்தேன்னா எங்க சொந்த காரங்களுக்கு பதில் சொல்லி முடியாது. அதனால எங்க அண்ணன் மகன் இருக்கிறான் அல்லது மகள் இருக்கிறாள். அவங்க சர்ச்சிக்கு போகிறதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களாம். அப்படியே கொஞ்ச நாள் போனபிறகு அவங்களும் சர்ச்சுக்கு வருவாங்களாம்'' என்று உள்ளபோய் மாட்டிக்கொண்டு, பிள்ளைகளின் வாழ்வை சீரழித்து, பின்பு தேவனையே குறை சொல்லிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. 
    கர்த்தர் தெளிவாக சொல்லுகிறார். ``என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள். ஆகவே நாம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது கர்த்தருக்கு தெரியும். எனவே அவர் ஒரு நாளும் நம்மை விட்டு விலகவும் மாட்டார். கை விடவும் மாட்டார். நன்மையானதை கர்த்தர் கட்டாயம் தருவார். அதனால் திருப்தியாவீர்கள். அவசரம் வேண்டாம். தாமதமானாலும் நன்மையானதையே பெற்றுக்கொள்வேன் என்று கர்த்தருக்காக காத்திருங்கள். இம்மாதத்தில் கர்த்தர் உங்கள் வாழ்வில் அற்புதம் செய்வார்.
    இது வரை அப்படியாக காத்திருந்த உங்கள் வாழ்வில் கர்த்தருடைய நன்மையை பெற்றுக்கொள்ளும் வேளை வந்துவிட்டது. கர்த்தர் உங்களை உயர்த்தப்போகிறார். நீங்கள் திருப்தியாவீர்கள்.
    இதுவரை உங்கள் வாழ்வில் நடந்து வந்த எல்லா பாதகமான சூழ்நிலைகளையும் மாற்றி, உங்களுக்கு எதிராக இருந்த எல்லா எதிரான சூழ்நிலையையும் அழித்து, இம்மாதத்தில் கர்த்தர் நன்மையானவைகளை கொடுக்கப்போகிறார். அல்லேலூயா...

0 comments:

Post a Comment