Bread of Life Church India

எனது தலைவன்

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தான் பின்பற்றக் கூடிய மாதிரியாக ஒரு தலைவரை தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பதுண்டு.
         அப்படி ஒருவர் பின்பற்றக் கூடிய தலைவர், எப்படிப்பட்டவர்? என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
ஏனென்றால் தான் பின்பற்றுகிறதலைவர்
(1)    நம்மில் ஒருவராக
(2)    நம்மில் மேலானவராக
(3)    நமக்கு முன்மாதிரியாக
(4)    நாம் நினைப்பதை அப்படியே செய்பவராக

இருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைப்பது உண்டு.

    ஆனால் இவையாவும் ஒன்றுசேர ஒருவருக்குள் அமைவதென்பது கூடாத காரியம். மாறாக ஒருசில தன்மையோடு மட்டுமே சில தலைவர் இருப்பதுண்டு.

    மேலும், தனக்கு முன்மாதிரியாக வைக்கும் தலைவர் சில நேரங்களில் ஏதோ ஒன்றில் தவறு செய்ய நேரிடும் பொழுது முழு மனதோடு ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு நபரும் விரும்புவதில்லை.

    ஏனென்றால், தவறு செய்யும் தலைவரின் தனித் தன்மை மற்றவர்களைப் போல சாதாரண நிலைக்குத் தள்ளப்படுகிறது.

    இது ஆன்மீகம், அரசியல், மற்றும் பொழுதுபோக்கு துறைகளானாலும் சரி மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் சிலர் அன்பின் மிகுதியில் தான் பின்பற்றுகிறவரை தலைவர் தன்மையுடன் காணலாம்.

    ஆனால் உலகமும் சரித்திரமும், அதை ஒப்புக் கொள்வதில்லை.

    ஆகவே, எந்த சூழ்நிலையிலும் சாதாரண நிலையிலல்ல இன்னொருவர் பின்பற்றக் கூடிய தலைவருக்குரிய தகுதிகளுடன் (தவறு செய்யாத) இருப்பதையே எல்லோரும், ஏன் சரித்திரமும் கூட எதிர்பார்க்கிறது.

    அப்படிப்பட்ட ஒருவரே தலைவர் என்றஇடத்திற்கு சரியானவராக இருக்க முடியும். இப்பொழுது எல்லோரு க்குள்ளும் எழும் கேள்வி, தவறே செய்யாத தலைவர் உண்டா? அவர் யார்? இதற்கு சத்தியமும் சரித்திரமும் ஒருவரை அடையாளம் காட்டுகிறது. அவர் யார்? எப்படிப்பட்டவர்?

     எதைப் பற்றியும், கவலைப்படாதவர்; எதற்கும் அஞ்சாதவர்; அநீதி அக்கிரமங்களை கண்டிக்கத் தயங்காதவர். மக்களின் விடுதலைக்காக துணிச்சலோடு போராடினவர். தன்னலமற்றவர்; பிறரை நேசித்தவர்; தனக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்பவர்,என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? என்று சவால் விட்டவர் (யோவான் 8:46). ``என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; என் பின்னே வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; என்று நல்வாழ்வுக்கு அழைக்கும் இயேசு கிறிஸ்துவானவரே.

1)  நம்மில் ஒருவராக

     நம்மில் ஒருவராக தன்னுடைய சிங்காசனத்தை விட்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் (லூக் 2:11), மனுஷர் தயவில் வளர்ந்தவர் (லூக் 2:52). மேலும் வேதம் கூறுகிறது. ``நம்முடைய பலவீனங்களைக்'' குறித்து (தோல்விகள்) பரிதபிக்கக் கூடாத (புரிந்து கொள்ள முடியாத) பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவற்றிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டு (நம்மில் ஒருவராக) பாவமில்லாத வராயிருக்கிற (குற்றமே செய்யாத) பிரதான ஆசாரியரே (தலைவரே) நமக்கிருக்கிறார் (எபி 4:15).

     இதிலே சொல்லப்பட்டிருக்கிறநம்மைப் போல என்று சொல்லும் வார்த்தை நமக்குள் ஒருவராய் இருக்கிறார் என்று பொருள்படும்படி எழுதப்பட்டுள்ளது. அவரே நமது பிரதான ஆசாரியர் என்று சொல்லும் வார்த்தை முதல் தலைவர் என்று நமக்கு வெளிப்படுத்துவதை காண முடிகிறது.

     இது நம்மில் ஒருவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறஎண்ணத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது.

2) நம்மிலும் மேலானவர்

    எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத் தக்கதாக, ``அவரை உன்னதங்களில் தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரும்படிச் செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். (எபே 1:20_23) என்று வேதம் நமக்கு தெளிவுபடுத்திக் கூறுகிறது.

    எனவே உன்னதங்கள் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக என்பதை நமக்கு உணர்த்தி கொடுக்கிறது.

    சரீரமான சபை என்பது ஒரு இடத்தையல்ல; திரளான மக்கள் கூட்டத்திற்கு (தலையாக) தலைவராக ஏற்படுத்தினார் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

    எனவே நாம் பின்பற்றுகிறவர் நம்மிலும் மேலான வராக இருப்பதை நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராகவும் உள்ளார்.

3) நமக்கு முன்மாதிரியாக

    அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாய் இருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.

    அவர் மனுஷ ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார் <பிலி 2:6_9> என்று வேதம் கூறுகிறது.

    அவர் எல்லாவற்றிற்கும் தலைவராயிருந்தும் அதை அவர் உயர்வாக எண்ணாமல், தம்மைத் தாழ்த்தி என்று சொல்வது நம்மைப் போல் மாற்றப்பட்டு, பாடுகளின் வழியாக இந்த உயர்வை பெற்றார் என்று மிகவும் அழகாக இந்தப் பகுதி நமக்கு விளக்கி கொடுக்கிறது.

    இதே வழியிலேயே தன் சீஷனும் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

    ``ஒருவன் என்னைப் பின் பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்'' (மத் 16:24). இது அவரே தம்மைப் பின்பற்றவிரும்புகிறவர்களுக்கு கொடுத்துள்ள ஒரு அறைகூவல் ``ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார் (1 பேதுரு 2:21) என்று வேதம் கூறுகிறது.

    தன்னைப் பின்பற்றி வர வேண்டுமென்று வார்த்தை அளவிலே நின்று விடாதபடிக்கு, அவைகளை செயலில் நிரூபித்து, மாதிரியை உண்டு பண்ணி கொடுத்திருக்கிறார். ஆகவே அந்தப் பாதையில் செல்வது அவர் பெற்றவெற்றியை பெற்றுக் கொள்வதற்காகத்தான். அவர் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

4) நாம் நினைப்பதை செய்கிறார்

     நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு (எபே 3:20) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் நாம் நினைப்பது மாத்திரமல்ல அதற்கும் மேலே அவரால் செய்ய முடியும் என்பதே வேதத்தின் பதில். இது நமக்கு மாத்திரமல்ல காலங்கடந்து, செய்துகொண்டு வருகிறவருக்கு சரித்திரமும் சாட்சி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

    ``பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று அவர் நமக்காக ஜெபித்த பொழுது. அவர்

1)    சிறுமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார்.
2)    தன்னுடைய சரீரத்தில் மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையிலிருந்தார்.
3)    பாடுகளின் உச்சத்தில் இருந்தார்.
4)    தன்னுடைய ஆத்துமாவிலும், சரீரத்திலும் மிகுந்த வேதனைக்குள்ளான நிலையில் இருந்தார்.

    ஆனால் தான் செய்து முடிக்க வேண்டியதில் மிகவும் தெளிவுள்ளவராய் இருந்தார். தான் வந்த, ஏற்றுக் கொண்ட பணியை மிகவும் சரியாக செய்து, இன்று உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பாவமன்னிப்பைப் பெற்று, நித்திய மரணம், நித்திய அழிவு ஆகியவற்றின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

    வேதம் கூறும்பொழுது ``நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன் (ரோமர் 7:15), நிர்பந்தமான மனுஷன் நான்; இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24) என்றமனிதனின் ஏக்கங்கள் தவிப்புகள், மனிதனின் விருப்பங்கள், இவைகளை நிறைவேற்றுகிறவராக ``கிறிஸ்து இயேசுவினாலே_ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2), ஆகவே நம்முடைய மனதில் நினைப்பதை நமக்காக செய்கிறவராக இருப்பவர், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பானவர் யார்?

    அப்படியானால், நான் பின்பற்றவிரும்பும் தலைவர் : சந்தேகமே இல்லை இயேசுவே!

0 comments:

Post a Comment